ஓசியில் பிரியாணி கொடுக்காத உணவக உரிமையாளரை மிரட்டிய காவலர்கள் பணியிட மாற்றம்..!
சென்னை தி.நகரில் ஓசியில் பிரியாணி கேட்டு கொடுக்காத உணவக உரிமையாளரை மது போதையில் மிரட்டியதாக இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவஞானம் தெருவில் காசிம் என்பவர் நடத்தி வரும் உணவகத்துக்கு சுதந்திர தினத்தின் போது வந்த தி.நகர் காவல் நிலைய காவலர்களான ஜெயபால், ஆனந்த் ஆகியோர் பணம் தராமல் பிரியாணி கேட்டதாக கூறப்படுகிறது.
இன்னும் வியாபாரம் தொடங்கவில்லை என்று கூறி காசிம் பிரியாணி தர மறுத்ததால், அங்கிருந்து சென்ற காவலர்கள் இருவரும் இரவு பத்தரை மணியளவில் மீண்டும் வந்து உணவு சாப்பிட்டுவிட்டு, பணம் தராமல் தகராறு செய்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காசிம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற ரோந்து போலீசார், மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் 2 காவலர்களையும் அழைத்துச் சென்றனர். இதனிடையே ஆனந்தை மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் ஜெயபாலை ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
Comments