சிறு, சிறு திருட்டில் ஈடுபட்ட கஞ்சா குடிக்கிகள் கைது.! ரத்த காயமும், சிசிடிவியும் சிக்க வைத்த பின்னணி.!

0 1743

சென்னை தாம்பரம் அருகே, கஞ்சா போதைக்கு அடிமையான 2 திருடர்கள், கடந்த 3 வருடங்களாக சின்ன, சின்ன திருட்டில் ஈடுபட்டு வந்த நிலையில், சிசிடிவி கேமிராவில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டின் போது ஏற்பட்ட ரத்த காயத்தால் வலுத்த சந்தேகமும், போலீசாரிடம் அவர்களை சிக்க வைத்துள்ளது. 

தாம்பரத்தை அடுத்த பாரதிநகர் பகுதியில், கண்ணன் என்பவரது வாகன வாட்டர் சர்வீஸ் கடை உள்ளது. இங்கு, அண்மையில் தகரத்தை உடைத்து புகுந்த ஒருவன், கல்லாவில் இருந்த 8 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளான்.

தகரத்தை உடைத்து உள்ளே நுழைந்தபோது, கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும், அருகில் கடைகளில், தனது கூட்டாளியோடு சேர்ந்து, ரத்தம் சொட்ட, சொட்ட கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது, அருகில் இருந்த மெடிக்கல் ஒன்றிற்கு சென்ற இருவரும், விளையாடும் போது தவறி கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டதாகவும், கட்டுப்போட மருந்துகள் வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

காயத்தை பார்த்த மருந்து கடைக்காரர் காயம் பெரியதாக உள்ளதால், மருத்துவ மனைக்கு சென்று கட்டு போடுங்கள் இதற்கு இங்கு மருந்து தர முடியாது எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது, கஞ்சா போதை தெளிந்து வலி அதிகமானதால், ரத்த காயத்துடன் இருந்த நபர், மருந்து கடைகாரரை வசைபாடியபடியே செல்ல, அங்கு நின்றிருந்த ரோந்து போலீசார், அதுபற்றி விசாரிக்க இருவரையும் அழைத்துள்ளனர்.

இதையடுத்து தப்பி ஓட முயன்ற இருவரையும் விரட்டிப் பிடித்த போலீசார் நடத்திய விசாரணையில், ஒருவன் பெருங்களத்தூர் சீனிவாசன் நகர் சரவணன் என்பதும், மற்றொருவன் தாம்பரம் நடுவீரபட்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பதும் தெரியவந்தது.

கஞ்சா போதைக்கு அடிமையாகி, திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

கடந்த மூன்று வருடங்களாக தாம்பரம், பெருங்களத்தூர், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில், சின்ன சின்ன கடைகளுக்குள், குறிப்பாக தகரம் அடிக்கப்பட்டிருக்கும் கடைகளை குறிவைத்து, கஞ்சா குடிக்கிகளான இருவரும் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments