கஞ்சா போதையில் அக்கம் பக்கத்தினரிடம் வம்பிழுத்து தகராறு...தட்டிக் கேட்டவரை வெட்ட முயன்ற இளைஞன்..!!

கன்னியாகுமரி அருகே, கஞ்சா போதையில் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் வம்பிழுத்து கத்தியைக் காட்டி மிரட்டியதோடு, சினை ஆடு ஒன்றை வெட்டிக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா போதைக்கு அடிமையாகி படிப்பை பாதியிலேயே கைவிட்ட வலியவிளை காலணி பகுதியைச் சேர்ந்த அபீஸ் என்ற இளைஞன், அடிக்கடி அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை அரை நிர்வாணமாக கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட அபீஸ், பக்கத்து வீட்டில் குடிநீர் பைப், பூத்தொட்டிகள் போன்றவற்றை அடித்து நொறுக்கியதாக சொல்லப்படுகிறது.
அப்பகுதியில் பெண் ஒருவர் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஆட்களை விரட்டியடித்த அபீஸ், முருகன் என்பவரது வீட்டிலும் கல்வீசி தாக்கியதாக தெரிகிறது.
இதனை தட்டிக் கேட்ட முருகனை வெட்டுக் கத்தியைக் கொண்டு விரட்டிய அபீஸ், முருகன் தப்பியோடியதால், அவர் வளர்த்து வந்த சினை ஆட்டை வெட்டிக் கொன்றான். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் அபீஸை போலீசார் கைது செய்தனர்.
Comments