செந்தில் பாலாஜி வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..! அமலாக்கத்துறை பற்றி புகார்களை அடுக்கிய கபில் சிபல்..!!

0 1957

கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கிய போது அதனை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்தது ஏன் என்று நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார். ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய பின் உயர்நீதிமன்றம் அதில் எப்படி தலையிட முடியும் என்றும் நீதிபதி வினவினார்.

செந்தில் பாலாஜியின் கைதில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவரை சட்டவிரோத காவலில் வைத்ததாக கருதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மீது இரு நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லியில் இருந்து காணொளி மூலம் வாதாடினார்.

செந்தில் பாலாஜி பணம் வாங்கினார், அல்லது வைத்திருந்தார், அல்லது மறைத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் அமலாக்கத்துறையிடம் இல்லை என்று தெரிவித்த கபில் சிபல், அமலாக்கத்துறையினர் ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும் என்ற விதியை புறந்தள்ளிவிட்டு கைது செய்த பின் ஆதாரங்களை தேடுகின்றனர் என்றார். கைது நடவடிக்கையில் அமலாக்கத்துறை எந்த விதிமுறையையும் பின்பற்றவில்லை என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது எனவும், ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும் எனவும், நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பது குறித்து வாதாடிய வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்ற அமலாக்கத்துறை வாதத்தை இரு நீதிபதிகளும் நிராகரித்துவிட்டதாகவும், எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் சட்டவிரோதம் என்றும் வாதிட்டார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி, கைது தொடர்பான ஆவணங்களை கொடுத்தார்களே, அதை செந்தில் பாலாஜி ஏன் வாங்க மறுத்தார் என்று கேள்வி எழுப்பினார். சட்டவிதிகளின் படி கைது நடைபெறவில்லை என்று நினைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி, அதற்கு உரிய இழப்பீடுகளை பெற்றிருக்கலாமாமே, அதை ஏன் செய்யவில்லை என்றும் வினவினார்.

அதற்கு, கைதுக்கான ஆவணங்களை எதையும் கையில் வழங்கவில்லை என்றும் இமெயில் மட்டுமே செய்திருந்ததாகவும், அதுவும் திருத்தப்பட்டு முறையானதாக இல்லை என்று என்.ஆர். இளங்கோ தெரிவித்தார். ஜூன் 13-ஆம் தேதி சோதனை தொடங்கியதில் இருந்து செந்தில் பாலாஜி உரிய ஒத்துழைப்பு தந்ததாகவும், ஆனால் ஒத்துழைப்பு தரவில்லை என்ற தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து அதன் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார். செந்தில் பாலாஜி தரப்பினர் தொடர்ந்து வாதத்தை முன் வைக்கும் வகையில் வழக்கை புதன்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதன் பின் அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments