பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக்க அ.தி.மு.க. எதிர்ப்பு..!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள தமிழக அரசை கண்டிப்பதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பர்கூர் ஊராட்சியில் உள்ள 35 குக்கிராமங்களில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிப்பதாகவும், அவர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கில் சரணாலயமாக அப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனால் விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், மருத்துவ சிகிச்சைக்காகவும் வாகனங்களை இயக்கவும் வனத்துறையினர் தடை செய்யும் நிலை ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
விளை நிலங்களின் மதிப்பு குறையும் சூழ்நிலையும் ஏற்படும் என்பதால் இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 6ஆம் தேதியன்று பர்கூரில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Comments