தெரு விளக்கு கேட்டது குத்தமா..? ஆரணி நகராட்சி கூட்டத்தில் பொறியாளர் செய்த சம்பவம்..! ஒன்றரை வருஷமா ஒன்றுமே நடக்கலை..
ஆரணி நகராட்சி கூட்டத்தில் தெருவிளக்கு அமைத்து தருமாறு கேட்ட கவுன்சிலரிடம் , உடலில் எண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொள்ளும் நிலையில் இருப்பதாக கூறி நகராட்சி செயற்பொறியாளர் ஆவேசமான சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் ஆணையர் தமிழ் செல்வி தலைமையில் நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் ஏ.சி. மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் ஒருவர் தங்கள் பகுதிக்கு தெருவிளக்கை சரி செய்து தருமாறு கோரிக்கை வைக்க அதற்கு பதில் அளிக்க நகர்மன்ற தலைவர் முயன்ற நிலையில், அங்கு இருந்த நகராட்சி பொறியாளர் விஜயகாமராஜ் என்பவர் எழுந்து ஆவேசமாக பேச ஆரம்பித்தார். கடந்த ஒன்றரை வருட காலமாக ஒரு வேலையும் நடக்கவில்லை என்றும், அதிகாரிகள் உடலில் எண்ணையை ஊற்றி கொளுத்திக் கொள்ளும் மன நிலையில் இருப்பதாக கொதித்தார்
கடந்த ஆட்சியில் சூரியகுளம் திட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 6 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், கொரோனா காலத்தில் சம்பள நிலுவை தொகைக்காக உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அந்த திட்டத்தில் இருந்து 1 கோடி ரூபாயை எடுத்து பணியாளருக்கு சம்பளமாக வழங்கினேன் என்று தெரிவித்த பொறியாளர், நிலுவை சம்பளம் வரப்பெற்றதும் அதனை அந்த திட்டத்திற்கு எடுக்க முயன்ற போது நான் ஏதோ பெரிய தவறு இழைத்ததாக கூறி ஆணையர் பிரச்சனையை உருவாக்கியதால் அந்த திட்டம் அப்படியே நின்று போனது அதன் பின்னர் ஆரணியில் எந்த திட்டங்களும் செயல்படவில்லை என்று வேதனை தெரிவித்தார் பொறியாளர் விஜயகாமராஜ்
ஆரணி நகராட்சி ஆணையர் தமிழ் செல்வி திண்டிவனத்துக்கு மாறுதலாகி செல்ல இருப்பது தெரிந்து, அவருக்கு எதிராக பொறியாளர் ஆவேசமானதாக கூறப்படுகின்றது.
Comments