''தி.மு.க. ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிப்பதும், நேர்மையாக தொழில் செய்பவர்கள் தண்டிக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன..'' - எடப்பாடி பழனிசாமி...!

தி.மு.க. ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிப்பதும், நேர்மையாக தொழில் செய்பவர்கள் தண்டிக்கப்படும் சம்பவங்களும் நடப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை நகர முன்னாள் செயலாளரும், நகைக்கடை உரிமையாளருமான ரோஜா ராஜசேகர் என்பவர் காவல்துறை கொடுத்த தொடர் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி, அவரை விசாரிக்க திருச்சி பகுதியைச் சேர்ந்த காவலர்கள் அழைத்துச் சென்றதாகவும், அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி ரயில் முன் பாய்ந்து ராஜசேகர் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தனி அமைப்பை நியமித்து விசாரிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Comments