குடிக்கிறது தப்பா.? விக்குறது தப்பா.? போலீசிடம் சிக்கிய போதை ஆசாமியின் புலம்பல்..!
சென்னையில் மது குடித்துவிட்டு ஞாயிறு இரவை நண்பர்களுடன் மெரினாவில் களிக்கச் சென்ற நபர், போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டதும் நாட்டில் குடிப்பது தப்பா என புலம்பித் தள்ளினார். அவரது நண்பர்களில் ஒருவர் போதை தெளியாமல் சாலையையே வீடாக நினைத்து படுத்து உறங்கிய நிலையில், போலீசார் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று ஓரமாக படுக்க வைத்தனர்.
நள்ளிரவில் நட்டநடு சாலையை வீடு போல் நினைத்து ஹாயாக படுத்து உறங்கிய நபரை சாலையை விட்டு அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசார் போராடிய காட்சிகள் தான் இவை....
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவலரின் மகன், தனசேகரன், கொளத்தூரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக நண்பர்கள் 4 பேருடன் காரில் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஞாயிற்றுக்கிழமையை உல்லாசமாக கழிக்க, மது வாங்கிக் குடித்துவிட்டு மெரினா சாலை வழியாகச் சென்றுள்ளனர்.
போக்குவரத்து போலீசார் அவர்களை மடக்கி பிரீத் அனலைசரில் சோதனை செய்தபோது அவர்கள் மது அருந்தியது உறுதியானது. இதனையடுத்து தனசேகர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதத்துக்கான ரசீதை கொடுத்துள்ளனர். அபராத ரசீதை வாங்காமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்த தனசேகரன், அருகில் செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதைப் பார்த்ததும் "போச்சு வீடியோ எடுக்கிறாங்க, வீட்டில் பார்க்கப் போறாங்க, நாளைக்கு சோறு கிடைக்காது" என்று புலம்பித் தள்ளினார்.
தனசேகர் உடன் வந்த நண்பரோ, குடிக்கிறது தப்பா சார்? அவங்களே விக்குறாங்க, அப்புறம் அவங்களே பிடிக்குறாங்க? இது என்ன நியாயம் சார்? என கேள்வி எழுப்பினார்.
5 பேரில் ஒருவர் முற்றிலுமாக நிதானத்தை இழந்து, சாலையையே வீடாக நினைத்து படுத்துக் கொண்ட நிலையில், போக்குவரத்துக் காவலர் ஒருவர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து கழுவி விட்டு எழுப்ப முயன்றார். ஆனால் பக்கத்தில் வெடிகுண்டே விழுந்தாலும் எழ முடியாத நிலையில், அந்த நபர் மயங்கிக் கிடந்தார்.
வேறு வழியின்றி போதை ஆசாமியை செய்தியாளர்கள் உதவியுடன் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று போலீசார் உள்புற சாலையோரம் கிடத்தினர்.
வழக்கும் பதிவு செய்யனும், போதையில் இருப்பவனை தூக்கி படுக்கவைக்கவும் செய்யனும் என போலீசார் நொந்துகொண்டே சென்றனர்.
Comments