ரஷ்யாவுக்கு எதிராக ஆயுத மேந்தி போருக்கு தயாரான ‘புதினின் சமையல்காரர்’..! 24 மணி நேர நாடகத்தில் அடுத்தடுத்து திருப்பம்!
ரஷ்ய அதிபர் புதினின் சமையல்காரர் என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு புதினுடன் நெருக்கம் காட்டிய வாக்னர் ஆயுதக்குழுவின் தலைவர் பிரிகோஷின், உக்ரைனுக்கு எதிரான போரை கைவிட்டு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய நிலையில் ஒரே நாளில் தனது முடிவில் பின்வாங்கியுள்ளார்.
மேஜையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புதினுக்கு மிக அருகில் நின்றபடி மது ஊற்றிக் கொடுக்க கோப்பையை கையில் வைத்துள்ள இவர் தான் ரஷ்யாவுக்கு எதிராகவே போரை முன்னெடுத்த வாக்னர் ஆயுதக்குழுவின் தலைவர் எவ்ஜெனிக் பிரிகோஷின்..!
ரஷ்ய அதிபர் புதினின் மாளிகையான கிரெம்ளினின் சமையல் ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் புதினின் சமையல்காரர் என்று வர்ணிக்கப்பட்டவர் எவ்ஜெனிக் பிரிகோஷின். இவர் தலைமையிலான வாக்னர் ஆயுதக்குழுவில் 25 ஆயிரம் ஆயுதம் தாங்கிய வீரர்கள் இருப்பதாக பிரிகோஷின் தெரிவித்த நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அவர்கள் ரஷ்யாவிடம் ஆயுதங்களை பெற்று உக்ரைனுக்கு எதிராக போர் செய்து வந்தனர்.
இந்த போரில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவேவின் நடவடிக்கைகள் முறையாக இல்லை என்றும் அவரது திட்டமிடாத செயல் மற்றும் தவறான வழிகாட்டுதலால் ஏராளமான வாக்னர் வீரர்கள் உயிரிழப்பதாக எவ்ஜெனிக் பிரிகோஷின் குற்றஞ்சாட்டி வந்தார். கடந்த வாரம் வாக்னர் படைகள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 2000 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறிய பிரிகோஷின், உக்ரைன் மீதான போரை கைவிட்டு, தன் சொந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தி மாஸ்கோவை கைப்பற்ற போவதாக எச்சரித்தார்.
வாகனர் படைகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்ய ராணுவ அமைச்சகம் மறுத்தது. ஆனால் அதனை நிராகரித்த பிரிகோஷின், தனது படைகளுடன், உக்ரைனில் இருந்து திரும்பி ரஷ்யாவுக்குள் நுழைந்து முக்கிய நகரான ராஸ்டவ் ஆன்டன் நகரை கைப்பற்றினர். ஒரு துப்பாக்கிக் குண்டை கூட சுடாமல் ராஸ்டவ் நகரில் உள்ள ரஷ்ய ராணுவத்தின் பிராந்தியத் தலைமையகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக வாக்னர் குழுவினர் அறிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக வரோனிஷ் நகரின் ராணுவ முகாம்களையும் , ராணுவ தளவாடங்களையும் கைப்பற்றி விட்டதாக வாக்னர் ஆயுதக்குழுவின் தலைவர் பிரிகோஷின் அறிவித்தார். அங்குள்ள ஹெலிகார்டர், ராணுவ டாங்கிகள் தகர்க்கப்பட்டன. இதையடுத்து, வாக்னர் குழுவின் வசம் சென்ற எண்ணெய் கிடங்கின் மீது ரஷ் ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்கினர்.
ஆயுதக்குழுவினர் மாஸ்கோவில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரம் வரை முன்னேறியதால் , சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வழியெங்கும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். மாஸ்கோ தெருக்களில் டாங்கிகள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், பொதுமக்களை வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
இது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், வாக்னர் படையின் நடவடிக்கை முதுகில் குத்தும் செயல் என்று கூறினார். ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசத் துரோகிகளாக கருதப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, இப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் சமரச முயற்சிகளை மேற்கொண்ட பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ, ரஷ்ய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்தி அதன்பின்னர் ஆயுதக்குழுவினருடனும் பேச்சு நடத்தினார். இந்நிலையில், ஆயுதக்குழுவினரை உக்ரைன் போர்க்களத்தில் தத்தமது இடங்களுக்கு திரும்பிச் செல்லுமாறு பிரிகோஷின் உத்தரவிட்டார். ரஷ்யாவில் ரத்தம் சிந்தப்படுவதை தாம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக புரட்சியை முன்னெடுத்த பிரிகோஷின், ஒரே நாளில் தமது முடிவில் இருந்து பின்வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது
Comments