அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீடு உட்பட 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு!

0 1742

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் வீடு உட்பட கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்...

கரூர் ராமகிருஷ்ணாபுரத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். உடனே வீட்டின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குமார் என்பவரை பெண் அதிகாரி ஒருவர் தாக்கியதாகவும், அதில் மயங்கி விழுந்த குமார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் வந்த காரின் கண்ணாடியை அங்கிருந்தோர் திடீரென உடைத்தனர்.

அசோக்கின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறி வருமான வரி அதிகாரிகள் 4 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்று வருமான வரி அதிகாரிகள் கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

மறுபுறம், கரூர் ஆண்டான் கோயில் புதூரில் உள்ள கல்குவாரி உரிமையாளர் தங்கராஜ் என்பவரின் வீட்டிற்கு சோதனை நடத்த சென்ற அதிகாரிகள் முன்பக்க கேட் பூட்டப்பட்டு இருந்ததால் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர்.

கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயனின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி அருகே பணப்பட்டி கிராமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் நடத்தி வரும் கல்குவாரி மற்றும் எம் சாண்ட் யூனிட்டுகளிலும், காளியாபுரம் பகுதியில் உள்ள அரவிந்த் என்பவரின் பண்ணை வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருவதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். 2006-க்குப் பின் தமது பெயரிலோ, தமது குடும்பத்தினர் பெயரிலோ ஒரு அடி சொத்து கூட சொந்தமாக வாங்கப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், வரி ஏய்ப்பு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

செந்தில்பாலாஜியின் சகோதரர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதன் மூலம் எதிர்க்கட்சியினரை மிரட்ட பா.ஜ.க. முயலுவதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார். வரி வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலில் தி.மு.க.வினர் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறை தாக்குதல் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளதாக பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறினார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீதும், வருமான வரித்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட எஸ்.பி. மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதைத் தடுப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கூறினார்.

சோதனை நடைபெறும் இடங்களில் எதுவும் இல்லை என்றால் தடுக்காமல், திறந்து காட்ட வேண்டியது தானே என்று சென்னையில் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் ஒப்பந்தம் எடுத்த அரசு ஒப்பந்ததாரர்கள் முறையாக கணக்கு காட்டவில்லை எனவும் எழுந்த புகார் தொடர்பாக இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments