தந்தை இல்லா மாணவியின் கனவுகளை காவு வாங்கிய அதிவேக Audi கார் ஓட்டுனர்..!

0 3915

தந்தை உயிரிழந்தாலும் தனது தன்னம்பிக்கையால் வாழ்வில் உயர்வேன் என கல்லூரி கருத்தரங்கில் சபதமேற்ற மாணவி ஒருவர், ஆடி கார் மோதி பலியான சோகம் தாராபுரத்தில் அரங்கேறி உள்ளது..

தந்தை இல்லை என்று கலங்கவில்லை... தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் பேசிய இந்த மாணவி தான் அதிவேக ஆடி கார் மோதி பலியானவர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் மாணவி வித்யாஸ்ரீ . சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் தனது தந்தை உயிரிழந்தாலும், தாய்க்கு ஆறுதலாக பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே கல்லூரி படிப்பையும் தொடர்ந்திருக்கிறார் மாணவி வித்யாஸ்ரீ. சம்பவத்தன்று கல்லூரியிலிருந்து டிவிஎஸ் மொப்பட்டில் சாலையோரம் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த ஆடி கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

இதில் சாலையோர கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்த வித்யாஸ்ரீயை அருகிலிருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வித்யாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காரை ஓட்டி வந்த கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்பவரை கைது செய்தனர்.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தாராபுரம் ஐ.டி.ஐ அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ள பகுதியில் வேகத்தடை இல்லாததால் மதுரையிலிருந்து கோயம்புத்தூர், ஈரோடு,திருப்பூருக்கு செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும் அதனால் இது போன்ற விபரீத விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மாணவி வித்யாஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தையடுத்து அவர் படித்த கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆடி கார் ஓட்டுனர் அஸ்வினின் அவசரமும், அதிவேகமும், தந்தையை இழந்தாலும் தடுமாறாமல் தன்னம்பிக்கை விதையாக இருந்த மாணவி வித்யாஸ்ரீயையும், அவரது கனவையும் காவு வாங்கி இருப்பது தான் சோகத்தின் உச்சம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments