மண் கடத்தலை தடுத்ததால் VAO மீது தாக்குதல்... அரிவாளுடன் துரத்தியதால் காவல் நிலையத்தில் தஞ்சம்..!

0 4473

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மண் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வை அடித்து உதைத்த மண் கொள்ளையன், அவரைக் கொல்லப் போவதாக அரிவாளுடன் துரத்தியதால் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

மானத்தாள் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் வினோத் குமார், கட்டுமானத்துக்கு பயன்படும் கரம்பை மண் கடத்தலை தொடர்ந்து தடுத்து வந்ததாக தெரிகிறது.

இவர் கொடுத்த புகாரின் பேரில், கடந்த 18-ம் தேதி மண் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கனிமவள துறையினர் பறிமுதல் செய்து சித்துராஜ், விஜி என்ற இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வினோத்கு மாரை சித்துராஜ் வழிமறித்துள்ளார்.

வினோத் குமாரை தாக்கி, அவரது செல்போனை பறித்த சித்துராஜ், அத்துடன் நிறுத்தாமல் தனது பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வினோத்குமாரை கொல்லப்போவதாகக் கூறி விரட்டியுள்ளார். அவரிடம் இருந்து தப்பி ஓடிய வினோத் குமார், தொளசம்பட்டி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

தகவல் அறிந்த ஓமலூர் தாலுக்கா கிராம நிர்வாக அலுவலர்கள் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். கொலை மிரட்டல் விடுத்தவரை உடனடியாக கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments