குடிபோதை கொடுமைகள்.. கலவரத்தில் முடியும் கல்யாணங்கள்..!
குடிபோதையால் நிகழும் கொடுமைகளின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி உள்ளனர், வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த பெண்கள். அங்குள்ள மீனவ கிராமம் ஒன்றில் குடிகாரர்களின் அட்டகாசத்தால் ஒவ்வொரு கல்யாணமும் கலவரமாக மாறிப் போவதாக குமுறுகின்றனர், அந்தப் பெண்கள்.
சிரிப்பைத் தொலைத்து நிற்கும் இந்தப் பெண்கள் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள காமேஸ்வரம் என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுவுடன் வந்திருந்த இவர்களின் பெரும் பிரச்சினை, குடிபோதை.
காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் பாண்டி சாராயம் மற்றும் மதுபானங்கள், காமேஸ்வரம் கிராமத்தின் முந்திரிக் காடுகளிலும் சவுக்குக் காடுகளிலும் வைத்து கள்ளத்தனமாக விற்கப்படுகிறது என்பது இப்பெண்கள் சொல்லும் தகவல். அந்த மதுவை வாங்கிக் குடிக்கும் காமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் செய்யும் அலப்பறையால், நாளொரு பிரச்சினையும் பொழுதொரு சிக்கலும் வந்து சேருவதாக குமுறும் இந்தப் பெண்கள், கல்யாணம், காது குத்து என்று எந்த விசேஷமாக இருந்தாலும் குடிகாரர்களால் கலகம் பிறந்து கலவரமாகிவிடுகிறது என்று புலம்புகின்றனர்.
குடிபோதையில் இருப்பவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்குத் தொல்லை தருவதாகவும், தாங்கள் கெட்டது போதாது என்று அடுத்த தலைமுறையும் கெடும் வகையில் பள்ளி மாணவர்களை போதைக்கு ஆளாக்குவதாகவும் பரிதவிக்கின்றனர்
Comments