துவர்ப்பு குடிநீர் விநியோகம்.. வேகாத வெயிலில் வைப்பாற்று.. ஊற்றில் தண்ணீர் எடுக்கும் பெண்கள்..!

0 1250

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பேரூராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீர் துவர்ப்புடன் இருப்பதால், மக்கள் ஆற்றில் ஊற்றுத்தோண்டி நீர் எடுத்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி சிலர், பக்கத்து ஊர்களில் இருந்து டிராக்டர் டேங்கரில் தண்ணீர் எடுத்து வந்து, ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு விற்று வருகின்றனர்.

வானம் பார்த்த பூமியாகிக்கிடக்கும்... விளாத்திக்குளத்தில் அக்னிக்கு முன்பே குடிநீர் தட்டுப்பாடு தொடங்கி விட்டது..! தலையில் குடங்களை தூக்கிக் கொண்டு... தண்ணீர் தேடி... வைப்பாற்றில் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மக்கள்.

விளாத்திக்குளம் பேரூராட்சி பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்படுவதாக கூறும் மக்கள், அந்த தண்ணீரும் துவர்ப்பு சுவையுடன் இருப்பதால், சோறு சமைக்க இயலவில்லை என்றும், பால் காய்ச்சினால் கெட்டுப்போய் விடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

அங்குள்ள சில பகுதிகளுக்கு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் இருந்து டிராக்டர் டேங்கர் மூலம் குடிநீரை கொண்டு வந்து, ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய் என விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சிதம்பர நகர் பெண்கள், தங்கள் வீடுகளுக்கு தேவையான குடிநீரை, வைப்பாற்றில் ஊற்று தோண்டி எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொளுத்தும் வெயிலில் அந்த குறுகலான ஊற்று கரையில் அமர்ந்து, பொறுமையாக சிரட்டை அகப்பையால் நீரை சேகரித்து, பிளாஸ்டிக் குடங்களில் ஊற்றி, அந்த குடம் நிரம்பியதும் எடுத்துச்செல்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகள் வைப்பாற்றிலுள்ள 9 தடுப்பணைகளில் நீர் தேங்கி இருந்ததால், தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், ஆனால் இந்தாண்டு போதிய மழை இல்லாததால், தடுப்பணைகளில் தண்ணீர் இல்லை, அதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறினாலும், இருக்கன்குடி அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதாகவும், விவசாயத்துக்கும், அனைத்து பகுதிகளுக்கான குடிநீருக்காகவும் பகிர்ந்தளிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணை நிறைய தண்ணீர் இருந்தும், குடிநீர் துவர்ப்பாக வருவதற்கான காரணத்தை அறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டால், மக்கள் குடிநீர் குடங்களுடன் இப்படி வைப்பாற்றில் அல்லாடும் நிலை ஏற்பட்டிருக்காது என்று சிலர் கூறினாலும், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட தாமிரபரணி, வைப்பாறு இணைப்புத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments