பைனான்சியர் வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது..!

கரூரில், பைனான்ஸ் நிறுவனத்தில் கையாடல் செய்த பணத்தை திருப்பிக் கேட்ட பைனான்சியர் வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பைனான்ஸ் தொழில் செய்து வரும் தினேஷ் குமார் என்பவரிடம், கரூரைச் சேர்ந்த கெளதம், ஆனந்த் ஆகியோர் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன் வரவு செலவில் குளறுபடி ஏற்பட்டதால் தினேஷ் விசாரித்த போது, இருவரும் சேர்ந்து 3 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் வேலையை விட்டு நிறுத்திய தினேஷ், கையாடல் செய்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த கெளதம், தனது அண்ணன் மதன் மற்றும் ஆனந்தை அழைத்துச் சென்று, நேற்றிரவு தினேஷ் வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீ பற்றவைத்து வீசிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
சிசிடிவி ஆதாரத்துடன் தினேஷ் அளித்த புகாரின் பேரில், மூவரையும் கரூர் வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.
Comments