விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கு.. கீழே விழுந்ததில் பல் உடைந்ததாகவும், காவல் அதிகாரி பிடுங்கவில்லை எனவும் பேட்டி..!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக கூறப்படும் நிலையில், தனது பல் காவல்துறையினரால் பிடுங்கப்படவில்லை எனவும் கீழே விழுந்ததில் பல் உடைந்துவிட்டதாகவும் சூர்யா என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.
பல் பிடுங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் விசாரணை நடத்த சேரன்மகாதேவி சார் ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி முக்கிய சாட்சியான சூர்யா, இன்று சார் ஆட்சியர் முன்னிலையில் ஆஜராகி ஒரு மணி நேரம் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, கீழே விழுந்ததில் தனது பல் உடைந்ததாக தெரிவித்தார்.
பின்னர் பல் உடைந்தது தொடர்பாக பரிசோதனை நடத்த அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு தாசில்தார் வாகனத்தில் சூர்யா அழைத்துச்செல்லப்பட்டார். ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்வதாக முதல்வர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் திடீரென இவ்வாறு கூறியுள்ளார்.
Comments