வேலை கிடைச்சிடுச்சி பொண்ணு கொடுக்கல.. ஜாதியால் தடுக்கப்பட்ட திருமணம்.. உயிரை மாய்த்த காதல் ஜோடி..!
5 வருடம் காதலித்த இளைஞருக்கு வேலை இல்லை என்று கூறி, திருமணத்துக்கு மறுத்த பெண் ஐ.டி ஊழியரின் பெற்றோர், பையனுக்கு வேலை கிடைத்ததும் சாதியை காரணம் காட்டி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே புடவையில் தூக்கிட்டு காதல்ஜோடி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், தாம்பரம் அருகே அரங்கேறி உள்ளது...
சென்னை தாம்பரம் அடுத்த பீர்கன்காரனை அண்ணா தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். எம்.காம் பட்டதாரியான இவர் தாம்பரம் மெப்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் உத்திரமேரூரை சேர்ந்த ஐ.டி.ஊழியரான யுவராணி என்பவரை 5 வருடமாக காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த வருடம் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நடக்கவில்லை.
சம்பவத்தன்று மதியம் ஜெயராமன் வீட்டிற்கு சென்ற யுவராணி ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இருவரது செல்போனுக்கும் வந்த அழைப்புகளை இருவரும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஜெயராமனின் தாய், வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டிற்குள் ஒரே புடைவையில் ஜெயராமனும், யுவராணியும் தூக்கில் தொங்கிய படி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர்கள் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
விரைந்து வந்த பீர்கன்காரனை போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பெண் வீட்டில் புது புது காரணங்களை கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் இந்த சோகமுடிவை தேடிக் கொண்டது தெரிய வந்தது.
ஒரு வருடத்துக்கு முன்பு ஜெயராமனும், யுவராணியும் திருமணம் செய்ய முடிவு செய்து, பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அப்போது, ஜெயராமனுக்கு நிலையான வேலை ஏதும் இல்லையே ? என பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரது விருப்பத்தின் பேரில் நிச்சயதார்த்தம் செய்து வைத்த பெற்றோர், ஜெயராமனுக்கு நல்ல வேலை கிடைத்ததும் திருமணம் நடத்தி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர். அதற்குள்ளாக தனியார் நிறுவன ஒன்றில் நல்ல வேலை கிடைத்து ஒரு வருடமாகியும் யுவராணியின் பெற்றோர் திருமணம் செய்து வைக்காமல் தள்ளிக்கொண்டே வந்துள்ளனர்.
இந்த நிலையில் யுவராணியிடம், ஜெயராமன் வேறு சாதி நாம் வேறு சாதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் வீட்டில் உள்ள உனது தங்கைக்கு வரன் கிடைக்காது என்று கூறி, யுவராணியின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க இயலாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த விரக்தியில் சாதி பூதத்தால் பிரிந்தாலும் , சாவிலாவது ஒன்று சேர்வோம் என்று, ஒரே புடவையில் தூக்கிட்டு இருவரும் உயிரை மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments