தமிழகத்தில் ஊரடங்கு.. ஜூன் 30 வரை நீட்டிப்பு..!

0 18912

தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்படுகிறது.  

வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து தடை இருக்கும். நீலகிரி மாவட்டத்துக்கும், கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள், சுற்றுலா விடுதிகள், பிற விருந்தோம்பல் சேவைகள் ஆகியவற்றைத் திறக்கத் தடை இருக்கும்.

வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். இந்த நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்பித்தலைத் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிரப் பன்னாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை நீடிக்கும்.  மெட்ரோ ரயில் / மின்சார ரயில் போக்குவரத்துக்குத் தடை இருக்கும்.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றைத் திறக்கத் தடை இருக்கும்.கடற்கரை, சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் செல்லத் தடை இருக்கும். 

சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, பண்பாட்டு நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்குத் தடை இருக்கும்.
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்துக்குத் தொற்றின் தன்மைக்கேற்றவாறு படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்படும்.
இறுதி ஊர்வலங்கள், அதைச் சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.  

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.  

பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

அனைத்துத் தொழில், வணிக நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments