​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2019-ல் நிகழ்ந்த தீவிர வானிலை சம்பவங்கள்.. இந்தியாவில் 2,038 பேர் பலி .!

Published : Feb 10, 2020 2:50 PM

2019-ல் நிகழ்ந்த தீவிர வானிலை சம்பவங்கள்.. இந்தியாவில் 2,038 பேர் பலி .!

Feb 10, 2020 2:50 PM

உலகம் முழுவதும் சமீப காலமாக பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு தீவிர வானிலை காரணமாக சுமார் 2,038 பேர் மரணித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இந்தியாவின் சுற்றுச்சூழல் 2020 என்ற அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வானிலை?

தீவிர வானிலை என்பதில் வறட்சி, காட்டு தீ, வெள்ளம், நிலச்சரிவு, கடும் வெப்பம், புயல் மற்றும் மூடுபனி உள்ளிட்ட நிகழ்வுகள் அடங்கும். சர்வதேச அளவில் கடந்த 2018ம் ஆண்டு 286 தீவிர வானிலை நிகழ்வுகளும், 2019ம் ஆண்டில் 228 தீவிர வானிலை நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன. இதில் 2018ம் ஆண்டில் 23 மற்றும் 2019ம் ஆண்டில் 9 தீவிர வானிலை நிகழ்வுகளை சந்தித்துள்ளது இந்தியா.

image

அதிகரித்த பலி.. 

2018-ம் ஆண்டை காட்டிலும் 2019-ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்துள்ள தீவிர வானிலை நிகழ்வுகள் குறைவு என்றாலும்,அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். 2018ல் 1,396 உயிர்களை பலி கொண்ட தீவிர வானிலை, கடந்த ஆண்டு 2,038 பேரை பலி கொண்டுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளிலும் இந்தியாவில் மாதம் ஒரு தீவிர வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

image

அதிக விழிப்பு:

இதன் பொருள் என்னவென்றால் சர்வதேச சமூகம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதாகும். விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை ஒரு காலநிலை அவசரநிலை என்று கோடிட்டு காட்டியுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் உருவான தீவிர வெப்ப அலை தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவை வறுத்தெடுத்தது. ஏப்ரலில், இடியுடன் கூடிய கனமழை இந்தியாவின் கிழக்கு, மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களை பாதித்துள்ளது.

image

வரிசை கட்டிய நிகழ்வுகள்:

பின்னர் வந்த மே, ஜூன் மாதங்களில் தாக்கிய வெப்ப அலைகளில் 11 தீவிரமானது. இதில் பீகாரில் அதிகபட்சமாக 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர் என கூறப்பட்டுள்ளது. ஜூலையில் தாமதமாக துவங்கிய பருவமழை அதிகம் பெய்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பின்னர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஹிகா, கியார், மஹா, புல்புல், பவன் என தொடர்ச்சியாக சுமார் 8 சூறாவளிகள் வரிசை கட்டின என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.