​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகனின் காதலிக்கு.. தாலி கட்டிய அமமுக பிரமுகர்..! வாழ்வு கொடுத்த மகன்

Published : Feb 02, 2020 6:57 AM



மகனின் காதலிக்கு.. தாலி கட்டிய அமமுக பிரமுகர்..! வாழ்வு கொடுத்த மகன்

Feb 02, 2020 6:57 AM

நாகப்பட்டினம் அருகே மகனின் காதலியைக் கடத்தி, கட்டாயத் தாலி கட்டி பலாத்காரம் செய்ததாக அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட நிலையில், தந்தையால் பலாத்காரத்துக்கு உள்ளான காதலியைத் திருமணம் செய்து கொண்டு மகன் வாழ்வு கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்த அமமுக பிரமுகர் கருப்பு நித்தியானந்தம் என்பவர் தான் இந்த புகாருக்குள்ளானவர்.

ஜவுளிக்கடை நடத்தி வந்த கருப்பு நித்தியானந்தம் என்பவரின் மகன் முகேஷ் கண்ணன். இவர் ஐடிஐ படிக்கும் போதிருந்தே தன்னுடன் படித்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். படிப்பை முடித்து இருவரும் சென்னையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபார்த்து வந்தனர்.

இந்நிலையில் மகனின் காதல் விவகாரம் தந்தை நித்தியானந்தத்துக்கு தெரியவந்தது. அவர் மகனின் காதலியிடம் செல்போனில் பேசி, ‘‘தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்து, நேரில் திருமணம் குறித்து பேச தனது வீட்டுக்கு தனியாக வருமாறு அழைத்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து 3 நாட்களுக்கு முன் முகேசின் காதலி, சென்னையில் இருந்து தனியாக கிளம்பி நித்தியானந்தத்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு நித்தியானந்தம் மட்டும் இருந்தார். வீட்டில் வேறு நபர்கள் இல்லை. அப்போது மகனின் காதலியிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்ட நித்தியானந்தம், திடீரென அந்த பெண்ணின் கழுத்தில் தான் தயாராக வீட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து வலுக்கட்டாயமாக கட்டியதாக கூறப்படுகின்றது.

இதைசற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக அலறித்துடித்துள்ளார் ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத நித்தியானந்தம் தாலி கட்டிய கையோடு, அவரை தொடர்ந்து 2 நாள் வீட்டிலேயே அடைத்து வைத்து பலாத்காரமும் செய்துள்ளார். கூச்சல் போடக்கூடாது என்று அவ்வப்போது அடித்து, உதைத்தும் வந்துள்ளார்.

இரு தினங்கள் கழித்து தனது நண்பர் அவுரிக்காட்டை சேர்ந்த சக்திவேல் என்பவரது வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று அடைத்து வைத்துள்ளார் நித்தியானந்தம், வாழ்க்கையை பறிகொடுத்த அந்த பெண் செய்வதறியாது திகைத்துள்ளார். இதனிடையே தனது காதலியை நயவஞ்சகமாக வர வழைத்து தந்தை தாலிகட்டிக் கொண்ட தகவல் முகேஷ் கண்ணனுக்கு தெரியவந்தது.

உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு அவுரிக்காடு சென்ற முகேஷ், தனது தந்தை கட்டிய தாலியுடன் சோர்ந்து போய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த காதலியை மீட்டு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அழைத்துச்சென்றுள்ளார். அங்கு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை செய்த அட்டூழியம் குறித்து புகார் அளித்தார்.

டி.எஸ்.பி அறிவுறுத்தலின் படி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்தியானந்தம், கூட்டாளி சக்திவேல், அவரது மனைவி பவுன்ராஜ் வள்ளி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து தன் தந்தை கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு, காதலிக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுத்த முகேஷ் தனது காதலிக்கு வாழ்வு கொடுக்கும் விதமாக அவரை திருமணம் செய்து கொண்டார்.

விபரீத தந்தையை சிறைக்கு அனுப்பிய கையோடு, உடல் சார்ந்து வருவதல்ல காதல், இருவரது உள்ளம் சார்ந்து வருவதே உண்மையான அன்பு என்பதை தனது செயலால் உணர்த்திய முகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.