​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.. தப்பிக்க என்ன வழி..?

Published : Feb 01, 2020 7:40 PM



அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.. தப்பிக்க என்ன வழி..?

Feb 01, 2020 7:40 PM

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில், விமான நிலையங்களில், பயணிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

சளி, இருமல் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால், அதிலிருந்து தப்பிக்க, கைகுலுக்குவதை தவிர்த்து, கைகூப்பி, வணக்கம் கூறலாம் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

சீனாவின் ஊகான் நகரில், கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா வைரசை கண்டு அனைத்து உலக நாடுகளும் அஞ்சியதால், மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிடாமல், மத்திய அரசும், தமிழ்நாட்டில் பரவிடாது தடுக்க மாநில அரசின் சுகாதாரத்துறையும், தடுப்பு நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும், தீவிரப்படுத்தியிருக்கிறது.

விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள், ஹேண்ட் சானிட்டைசர் எனப்படும் கிருமி நாசினி மருந்து மூலம் கைகளை நன்றாக சுத்தம் செய்த பின்னரே, வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சீனாவின் ஊகான் உள்ளிட்ட கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளிலிருந்து, வருகின்றவர்களின், ரத்த மாதிரி, மூக்கிலிருந்து எடுக்கப்படும் சளி போன்றதொரு திரவம் ஆகியவை சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அவர்கள், 28 நாட்கள், தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொது இடங்களில், பயணிகள், பொதுமக்களின் கைபடும் இடங்களின் மூலமாக கூட வைரஸ் தொற்று பரவக்கூடிய ஆபத்து உள்ளது. தனிமனித அளவில் நோய் தொற்று பாதிப்பை தடுத்திடும் வகையில், நுண்கிருமிகளை தடுக்க வல்ல தரமான முகமூடிகள் விநியோகிக்கப்படுகிறது.
நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களை கொண்டிருக்கும் மாநிலங்களில், அரசு மருத்துவனைகளில், பிரத்யேக வார்டுகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு, சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொருவரும், சுத்தமான ஆடை அணிவது, நாளொன்றுக்கு, குறைந்தபட்சம் இருமுறை குளிப்பது உள்ளிட்ட தனிமனித சுகாதாரத்தை பேணுவதை அவசியம். மருத்துவ குணங்கள் நிறைந்த சோப்புகள், கிருமி நாசினிகளை பயன்படுத்தி, அடிக்கடி கைகழுவதை வழக்கப்படுத்திடல் வேண்டும்.

இருமும்போதும், தும்மும்போதும் கைகளாலோ, அல்லது, கைக்குட்டை உள்ளிட்ட சுத்தமான துணிகளினாலோ முகத்தை கண்டிப்பாக, மூட வேண்டும். மேலும், காற்றில் பரவும் நுண்கிருமிகளை தடுக்கும் என்-95 ரக முகமூடிகளை பயன்படுத்த வேண்டும்.

சளி, இருமல் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால், அதிலிருந்து தப்பிக்க, கைகுலுக்குவதை தவிர்த்து, கைகூப்பி, வணக்கம் கூறலாம் என்றும் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையும், மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர் காய்ச்சல், இருமல், சளி, உடல்சோர்வு, சிலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவரை அணுக வேண்டும். கொரோனா வைரசிற்கு வெப்பம் ஒரு மிக முக்கிய எதிரி ஆகும். இதனால், தற்போது, வெப்பம் தலைதூக்க ஆரம்பித்திருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது சற்று கடினம் தான் என நம்பிக்கையூட்டுகின்றனர், மருத்துவர்கள்...