​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
CAA சட்டத்திருத்தம் மூலம் காந்தியின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது - குடியரசுத் தலைவர்

Published : Jan 31, 2020 11:11 AM



CAA சட்டத்திருத்தம் மூலம் காந்தியின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது - குடியரசுத் தலைவர்

Jan 31, 2020 11:11 AM

நாட்டின் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில்  வாழ பிடிக்காமல் இந்தியா வரும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவு, குடியுரிமை திருத்த சட்டத்தால் நிறைவேற்றப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மைய மண்டபத்தில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், பரஸ்பரம் பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்களே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்றும், போராட்டங்களில் நடைபெறும் வன்முறைகளால் ஜனநாயகம் பலவீனப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் இந்தியா வந்தால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதாகவும், ஆதலால் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது இந்திய அரசின் கடமை என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

பாகிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்ற இருஅவைகளும் நிறைவேற்றி தேசப் பிதா மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பல ஆண்டுகளாக அடக்குமுறையை எதிர்கொண்டு வருவதாகவும், இதற்கு நான்கனா சாஹிப் குருத்வாராவில் நடந்த வன்முறை சம்பவமே ஆதாரம் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டிப்பதாக கூறிய அவர், பாகிஸ்தான் நிகழ்வுகளை சர்வதேச சமூகம் தனது கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அத்துடன், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டியது இந்தியாவின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தி கொண்டிருக்கையில், அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சலசலப்பு நிலவியது.