​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் சிறுகுறு அடர்காடுகள்..! புதிய முயற்சி

Published : Jan 25, 2020 2:43 PM



சென்னையில் சிறுகுறு அடர்காடுகள்..! புதிய முயற்சி

Jan 25, 2020 2:43 PM

சென்னையில் மியாவாகி (miyawaki) முறையில் சிறுகுறு அடர்காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த மியாவாகி முறை என்றால் என்ன? அதன் பலன்கள் என்ன? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி...

நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசு , பருவ மழை தவறுதல் , புவி வெப்பமயமாதல் , கடல்நீர் உட்புகுதல் ஆகியவை மரம் வளர்ப்பின் அவசியத்தை நமக்கு அறிவுறுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு, சென்னையில் குறுகிய காலத்தில் அதிக மரங்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் , மியாவாகி முறையில் அடர்காடுகள் வளர்க்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது சென்னை மாநகராட்சி.

ஜப்பான் நாட்டின் யோகாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தாவரவியலாளர் அகீரா மியாவாகியின் "இடைவெளி இல்லா அடர்காடுகள்" என்ற தத்துவம் தான் மியாவாகி முறை ஆகும். உலகளவில் ஏற்றுக்கொண்ட இந்த அடர்காடுகள் வளர்க்கும்  முறை, அதனை கண்டுபிடித்த அகீரா மியாவாகிக்கு (Akira Miyawaki) 2006ம் ஆண்டு சர்வதேச சுற்றுச்சூழல் விருதான ப்ளு பிளானட் (Blue Planet )விருதினை பெற்றுத்தந்துள்ளது.

மியாவாகி முறையின்படி மிக குறைவான இடத்தில் கூட அடர்காடுகள் வளர்க்க முடிகிறது. இந்தத் திட்டத்துக்காக முதலில்  சமமான நிலத்தில்  5 முதல் 10 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி, அதில் இயற்கை உரம் மற்றும் மண்ணை கொண்டு நிரப்ப வேண்டும்.  பின்னர் குறுகிய இடைவெளி மட்டும் விட்டு நெருக்கமாக நிறைய நாட்டு மரக்கன்றுகளை நட வேண்டும். இதுபோல நடப்படும் மரக்கன்றுகள்,  அதிக சூரிய ஒளியினை இழுத்துக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு  10 ஆண்டுகளில் எட்டக்கூடிய வளர்ச்சியை  மூன்றே ஆண்டுகளில் எட்டிவிடுகின்றன.

இந்த முறையில் நகர்புற அடர்காடுகள் வளர்க்கும் திட்டம் சென்னையில் முதன்முதலாக தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் வேப்ப மரம் , புங்கை, பூவரசம், முருங்கை போன்ற 2000 மரக்கன்றுகள் வளர்க்க பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற சிறு சிறு  அடர்காடுகள் வளர்க்க மிக சொற்ப செலவே ஆகிறது. 600 சதுர அடி இடத்தில் கூட இந்த முறையை நடைமுறைப்படுத்தி நிறைய மரங்கள் வளர்க்க முடியும்  என்கிறார் ஈசி பாரஸ்ட் அமைப்பு நிர்வாகி ராமச்சந்திரன்.

இத்தகைய காடுகள், நகர்புறங்களில் அதிகரித்துவரும் காற்றுமாசை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு பயன்கள் கிடைக்க வழிவகுக்கும் எனவும், குறிப்பாக சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும் என்றும் கூறுகிறார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். 

மியாவாகி மரம்வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினால் பொதுமக்களும் தங்களை அதில் ஈடுபடுத்திக்கொள்ளும் சூழல் உண்டாகும் என்று தெரிவிக்கும் ஆர்வலர்கள், தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.