​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெற்பயிரை பதராக்கும் லட்சுமி வைரஸ் - விவசாயிகள் கண்ணீர்

Published : Jan 25, 2020 7:13 AM



நெற்பயிரை பதராக்கும் லட்சுமி வைரஸ் - விவசாயிகள் கண்ணீர்

Jan 25, 2020 7:13 AM

சீனாவை கொரோனா வைரஸ் மிரட்டிவரும் நிலையில், தமிழகத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிரை தாக்கி வரும் லட்சுமி வைரசால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பதர்களாக மாறிவருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சம்பா அறுவடை நடந்து வரும் கடலூர் மாவட்டத்தில் தான் நெற்பயிரில் வைரஸ் நோய் தாக்கி விவசாயிகளை கண்ணீரில் மிதக்கவைத்து வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

image

பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மீதிகுடி, கோவிலாம்பூண்டி, நார்க்கரவந்தன்குடி, சித்தலப்பாடி, பின்னத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் பயிர்கள், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி காணப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், பொங்கல் திருவிழாவை தங்கள் நெல் வயல்களில் கொண்டாடினர்.

இந்த நிலையில் மீதிகுடியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரின் வயலில் அழைக்காமல் வந்தது அந்த விபரீதம். அவரது வயலில் முற்றிய நிலையில் காணப்பட்ட நெற்கதிர்களில் மஞ்சள் நிற கட்டிகள் போல் ஒட்டிக் கொண்டு இருந்து உள்ளது. வயலில் பாதி அளவிற்கு இதேபோல் காணப்பட்ட நிலையில், மறு நாள் கருப்பு நிறமாக மாறிய நெற்கதிர்கள் பதர்களாக மாறிப்போனதை கண்டு அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு கதறினார் அந்த விவசாயி...

image

இதுபோன்று ஒரு வயலில் அல்ல, சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வயல்களிலும் வேகமாகப் பரவி பயிர்களை பதர்களாக்கி வருகின்றது.

இந்த முறை நல்ல மகசூல் கிடைக்கும் என்று உற்சாகத்தில் இருந்த விவசாயிகள், தங்கள் வயல்களில் விளைந்த நெற்கதிர்கள் பூச்சித் தாக்குதலால் பதர்களாக மாறுவதை கண்டு, வீட்டுக்கு கூட செல்லாமல், வட்டிக்கு வாங்கிய கடனை எப்படி கட்டபோகிறோம் என்ற வேதனையில் தவித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் தாங்கள், இது போன்ற பூச்சித் தாக்குதலை பார்த்ததே இல்லை, இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மருந்து கடைகளுக்கு சென்று நெற்பயிரில் மஞ்சள் கட்டிபோல் வந்துள்ளது என்று கூறி மருந்துகளை வாங்கி வந்து மூன்று முறைக்கு மேல் தெளித்தும் பயனில்லை என்கிறார் விவசாயி ராஜேந்திரன்.

பயிர்களை பரிசோதித்த வேளாண் அதிகாரிகளோ, இது லட்சுமி வைரஸ் என்ற வகையைச் சார்ந்த கிருமியின் தாக்குதலால் பயிர்களில் ஏற்படும் நோயாகும் என்றும், அதிக மகசூல் உள்ள வயல்களில் நெற்கதிர்களில் இந்த நோய் மின்னல் வேகத்தில் காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக கடந்த பொங்கல் பண்டிகைக்கு பின்னர் நெற்பயிர்களை இந்த நோய் மிக வேகமாக தாக்கி வருவதாகவும், இதனால் கதிர்கள் அனைத்தும் பதராக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு கதிரிலும் சுமார் 100 நெல்மணிகள் இருந்த இடத்தில் லட்சுமி வைரஸ் தாக்கியதால் பதர்களாக மாறி போயுள்ளதை உறுதி படுத்தினர். மேலும் இனிமேல் இதனை எந்த மருந்துகளாலும் கட்டுப்படுத்த முடியாது என்றும், விவசாயிகள் விலைகுறைவாக கிடைக்கும் சில போலி மருந்துகளை அடிப்பதால் வைரசை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பரவிவருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

image

ஏற்கனவே நெல்மணிகள் பதர்களாகி போன நிலையில், வைரஸ் தாக்கிய நெல் மற்றும் வைக்கோலை வாங்க எவரும் முன் வர மாட்டார்கள் என்றும், பல்வேறு இடங்களில் தாங்கள் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள நிலையில் அந்தக் கடனை அடைப்பது எப்படி என்றும் தங்களுக்கு தெரியவில்லை என கண்ணீர் மல்க வேதனையில் தவிக்கும் விவசாயிகள், அரசு தங்களுக்கு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டாவது நல்ல விளைச்சலுடன் தங்கள் வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று காத்திருந்த விவசாயிகளின் வயல்களுக்கு அழையா விருந்தாளியாக வந்த லட்சுமி வைரஸ் மொத்த மகசூலையும் கபளீகரம் செய்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போர்க்கால அடிப்படையில் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே உழவனை நேசிக்கும் உலகத்தாரின் எதிர்பார்ப்பு..!