​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாளால் கேக் வெட்டிய தூத்துக்குடி சண்டியர்..! விருந்துக்கு ஏற்பாடு

Published : Jan 24, 2020 6:59 AM



வாளால் கேக் வெட்டிய தூத்துக்குடி சண்டியர்..! விருந்துக்கு ஏற்பாடு

Jan 24, 2020 6:59 AM

சென்னையில் வாளால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் கையில் வாள் பிடித்து கேக்வெட்டிய ரவுடியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

சென்னையில் அரிவாள் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் கலாச்சாரத்தை தொடங்கிவைத்த ரவுடி பினு போலீசாரின் சிறப்பான கவனிப்புக்கு பின்னர் சர்க்கரை வியாதியால் அவதிபட்டு வருகின்றார்.

அண்மையில் மதுரவாயலில் வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்

இந்த நிலையில் தூத்துக்குடி அடுத்த பண்டாரம்பட்டி பகுதியில் துருப்பிடித்த இரும்பு வாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய சண்டியர் ஒருவர் கூட்டாளிகளுக்கு கேக் ஊட்டியதோடு, அந்த காட்சியை படம் பிடித்து கொலை வெறியை தூண்டும் கானா பாட்டுடன் இணைத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.

இதுதொடர்பாக விசாரித்த காவல்துறையினர் கையில் கொடுவாளுடன் கேக்கை வெட்டிய சண்டியர் முதல் கொண்டு, கூடி நின்று கைதட்டிய அடிப்பொடிகள் வரை அனைவரும் பண்டாரம்பட்டியை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். அவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் கையில் கத்தியுடன் கூலித்தொழிலாளியை மறித்து பணத்தை பறித்த ரவுடி மோகன்ராஜ் என்பவரை காவல்துறையினர் விரட்டிச்சென்ற போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்த மோகன்ராஜின் வலது கால் முட்டி உடைந்து போனது.

உடனடியாக ரவுடி மோகன்ராஜை மீட்ட காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் அவரது வலது காலுக்கு மாவுகட்டு போட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

மோகன்ராஜ் போலவே கத்தியுடன் சுற்றிதிரியும் பண்டாரம்பட்டி சண்டியர்களும் வழுக்கி விழாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.