​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...

Published : Jan 21, 2020 6:22 PM

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...

Jan 21, 2020 6:22 PM

ங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் நேற்று வெடிகுண்டுகள் அடங்கிய மர்ம பை ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. அதில் இருந்த மூன்று வெடிகுண்டுகள் நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் அழிக்கப்பட்டன. சக்தி வாய்ந்த அந்த வெடிகுண்டுகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுக்க உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் விரிவான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

பயணிகளின் உடமைகளை வெடிகுண்டு நிபுணர்கள் மட்டுமின்றி வெடிகுண்டை கண்டறியும் மோப்ப நாய் மூலமாகவும் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு பார்வையாளர்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். விமான நிலைய வளாகம் மற்றும் ஓடுபாதைகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களும், வெளி பகுதியில் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

விமான நிலையம் வளாகத்திற்குள் வர பார்வையாளர்களுக்கு 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கப்படுவதாகவும், 24 மணி நேரமும் இந்த சோதனை தொடரும் என்றும் மகாலிங்கம் தெரிவித்தார்.

இதே போன்று மதுரை விமான நிலையத்தில் இதுவரை இருந்த 5 அடுக்கு பாதுகாப்பு 7 அடுக்காக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த பத்து நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வாகன நிறுத்துமிடங்கள் பயணிகள் தங்கும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்த வண்ணம் உள்ளனர். இதே போல தூத்துக்குடி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.