​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலம்மாள் கல்விக் குழுமம் - வருமானவரி சோதனை

Published : Jan 21, 2020 3:45 PM

வேலம்மாள் கல்விக் குழுமம் - வருமானவரி சோதனை

Jan 21, 2020 3:45 PM

தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை நிறுவியுள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்னை, மதுரை உள்பட சுமார் 50 இடங்களில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை சுற்றுவட்டாரத்தில் சூரப்பட்டு, பருத்திப்பட்டு, அயனம்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வேலம்மாள் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரி, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளி, வேலம்மாள் இன்டர்நேசனல் பள்ளி உள்ளிட்டவற்றில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் வேலம்மாள் போதி கேம்பஸ், வேலம்மாள் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி சாலையிலுள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, அதே வளாகத்திலுள்ள சி.பிஎஸ்சி பள்ளி, திருப்புவனம் லாடனேந்தலிலுள்ள வேலம்மாள் உறைவிடப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் காலை 10.30 மணி முதல் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்,.

தேனி அருகே முத்துதேவன் பட்டியில் இயங்கிவரும் வேலம்மாள் சிபிஎஸ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை இன்னும் 2 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.