​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணே, ஆம்னி பஸ் டயர் கழண்டு ஓடுது..! அதிர்ஷ்டத்தால் தப்பிய உயிர்கள்

Published : Jan 21, 2020 7:03 AM

அண்ணே, ஆம்னி பஸ் டயர் கழண்டு ஓடுது..! அதிர்ஷ்டத்தால் தப்பிய உயிர்கள்

Jan 21, 2020 7:03 AM

கரூரில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட கேபிஎன் நிறுவன ஆம்னி பேருந்தின் இடது புற முன்பக்க டயர் ஒன்று தனியாக கழன்று ஓடிய வேகத்தில், கூட்டுறவு நியாயவிலை கடையின் சுற்றுசுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. 

கரகாட்ட காரன் சினிமாவில் காரின் முன்பக்க டயர் கழன்று ஓடி வண்டி குடைசாயும் காமெடி காட்சி பிரபலம் அதே பாணியில் கரூர் அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கே.பி.என் நிறுவன ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதூர் பகுதியில் சென்ற போது முன் பக்க இடது புற டயர் அப்படியே கழன்று தனியாக ஓடியது.

பாய்ந்து ஓடிய வேகத்தில் அந்த டயர் சாலையோரம் இருந்த கூட்டுறவு நியாயவிலை கடையின் சுற்று சுவரை உடைத்துக் கொண்டு வளாகத்திற்குள் புகுந்தது.

சாலையில் முன்பக்க சக்கரம் இன்றி சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்ட பேருந்தை ஓட்டுனர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 20 க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஆண்டுக்கு ஒரு முறை எப்.சி கட்டாயம் என்ற விதி அமலில் இருக்கும் நிலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், குறிப்பிட்ட பேருந்து சாலையில் பாதுகாப்பாக இயங்கும் வகையில் உள்ளதா ? என்பதை முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கியதால் இந்த விபரீத விபத்து நிகழ்ந்து உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர் பயணிகள்..!

பழைய பேருந்துகளுக்கு புதியது போல வர்ணம் பூசி அலங்கரித்தாலும் பழுதடைந்த முக்கிய பாகங்களை மாற்றாமல் அதை வைத்தே வண்டியை ஓட்டினால் வண்டி குடைசாய்ந்து நடு வழியில் நிறுத்தி விடும் என்றும், அதிர்ஷ்டவசத்தால் இந்த விபத்தில் உயிர்ப்பலி நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார்.