​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை தமிழர் அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க வழிவகை: நிர்மலா சீதாராமன்

Published : Jan 19, 2020 2:26 PM

இலங்கை தமிழர் அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க வழிவகை: நிர்மலா சீதாராமன்

Jan 19, 2020 2:26 PM

அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் சென்னை சிட்டிசன் பாரம் மற்றும் நியு இந்தியா பாரம் (( Chennai Citizans’ Forum & New India Forum )) அமைப்பு சார்பில் நடைபெற்ற “குடியுரிமை திருத்த சட்டம் 2019” குறித்த விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், முந்தைய குடியுரிமை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் அரசு மேற்கொள்ளவில்லை என்றும், புதிதாக சில அம்சங்கள் மட்டுமே அரசால் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதை அமல்படுத்துவது மாநிலங்களின் கடமை என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் , குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மாநிலங்கள் தெரிவிப்பது சட்டத்துக்கு புறம்பானது எனவும் கூறினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அண்டை நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அதற்காக அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட மாட்டாது என்று அர்த்தம் கிடையாது என்றும் கூறினார். இந்தியாவில் இலங்கை தமிழர்கள் 95 ஆயிரம் பேர் முகாமில் அகதிகளாக இருப்பதாகவும், அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில், மருத்துவம், அடிப்படை கட்டமைப்புகள் உட்பட பல்வேறு துறைகளின் ஜிடிபி 61 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற, முதுபெரும் சட்ட நிபுணர் பால்கி வாலாவின் நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனைக் கூறினார்.

ஜி.எஸ்.டி சம்பந்தமான 95 விழுக்காடு வழக்குகளுக்கு சுமூக முடிவுகள் எட்டப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் நடவடிக்கைகளால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 86 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தம்மிடம் அறிவுறுத்தி கூறியிருப்பதாகவும், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.