​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 கிலோ தங்கம் வழிப்பறி.. ஈரானிய கொள்ளையர்கள் சிக்கினர்..

Published : Jan 18, 2020 3:26 PM

4 கிலோ தங்கம் வழிப்பறி.. ஈரானிய கொள்ளையர்கள் சிக்கினர்..

Jan 18, 2020 3:26 PM

சென்னை யானைக்கவுனியில் டெல்லி போலீசார் எனக்கூறி நகை வியாபாரியிடம், 4 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஈரானிய கொள்ளையர்கள் நான்கு பேர் சிக்கினார்கள்.

கோவா தப்பிய அவர்களை சிசிடிவி பதிவு மற்றும் செல்போன் சிக்னல் மூலம் பின் தொடர்ந்த போலீசார், போபாலுக்கு ரயிலில் தப்ப முயன்றபோது நடுவழியில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு நகைக் கடையில் பணியாற்றுபவர் தினேஷ். இவர் கடந்த 10 ஆம் தேதி காரில் சென்னை வந்து சவுகார்பேட்டையில், வினய் என்பவரிடம், ஒரு கோடியே 73 லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்து சுமார் 4 கிலோ தங்க கட்டிகள் வாங்கியுள்ளார்.

பின்னர் காரில் ஏறுவதற்காக பூக்கடை வீரப்பன் தெருவுக்கு சென்ற போது, 4 நபர்கள், டெல்லி போலிசார் என்று இந்தியில் பேசி, தினேஷிடம் இருந்த நகை பையை வாங்கி சோதனையிடுவது போல் நடித்து கொள்ளையடித்துச்சென்றனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய யானைக்கவுனி போலீசார், சம்பவம் நிகழ்ந்த இடத்திலுள்ள சி.சி.டிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் 4 நபர்களும், மத்தியப்பிரதேசத்தில் தங்கியுள்ள ஈரான் வம்சாவழி கொள்ளையர்கள் என்றும், ஏற்கனவே சென்னையில் கைவரிசை காட்டியவர்கள் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து பல்வேறு சிசிடிவி பதிவு மற்றும் அவர்களது செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், 4 பேரும்,கோயம்பேடு சென்று, அங்கிருந்து கோவாவுக்கு பேருந்திலும், பின்னர் போபாலுக்கு ரயிலில் தப்பிச்செல்வதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ரயில்வே மற்றும் மத்தியப்பிரதேச போலீசார் உதவியுடன், கவ்டா என்ற ரயில் நிலையத்தில் வைத்து 4 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பெயர் அபு ஹையர் அலி, மெகந்தி ஹாசன், சாதிக் மற்றும் ஹாசன் என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களை காவலில் எடுத்து, மீதம் உள்ள தங்க கட்டிகள் பற்றி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.