​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..!

Published : Jan 17, 2020 5:58 PM



அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..!

Jan 17, 2020 5:58 PM

லங்காநல்லூர்  ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய முக்கிய பிரமுகர்களின் காளைகளை தொட்டுப் பார்க்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளும், பிடிக்கவந்தவர்களை மிரட்டி, தெறித்து ஓடவிட்டன.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தலைமையானது என்று வர்ணிக்கப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கம்போல பார்வையாளர்கள் களிப்பில் ஆழ்த்தியது. அதிலும் நடப்பு ஆண்டில் முக்கிய பிரமுகர்கள் பலரின் காளைகளும் களம் இறங்கின.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி,ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், அமமுக கட்சி தலைவர் தினகரன் ஆகியோரின் காளைகள் பங்கேற்றன.

இவை தவிர மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, திண்டுக்கல்லைச் சேர்ந்த காவல் அதிகாரி மாணிக்கவேல், புதுக்கோட்டை ஆய்வாளர் அனுராதா ஆகியோரின் காளைகளும் களம் கண்டன. 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் என மூன்று காளைகளும், கெத்து காட்டின. அந்த காளைகளை தொட்டுப் பார்க்க கூட யாருக்கும் துணிவில்லாத நிலையே ஏற்பட்டது. வாடி வாசலை கடந்து அந்த மாடு பிடி வீரர்களின் கூட்டம் தெறித்து ஓடியது.

அதிலும் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன் காளை களத்தில் அனைவரையும் மிரட்டி ஓட வைத்த காட்சிகள் இணையத்தில் பரபரப்பாய் பார்க்கப்பட்டு வருகிறது.

இதே போன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரின் காளைகளும் பிடிக்க வந்தவர்களை மிரட்டி, களத்தில் விறுவிறுப்பை ஏற்றின.

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் காளையர்களுக்கு சவால் விட்ட புதுக்கோட்டை ஆய்வாளர் அனுராதாவின் காளையான ராவணன் அலங்காநல்லூரிலும் தன் திறமையை வெளிக்காட்டியது. கொம்பு வைத்த சிங்கம் போல அந்த காளை களம் எங்கும் நின்று, நிதானித்து துணிச்சலுடன் விளையாடியது.

ஆனால் மற்ற ஊர்களை போல அலங்காநல்லூரில் அந்த காளையை, மாடுபிடி வீரர்கள் எளிதாக களம் விட்டு செல்ல விடவில்லை. முடிந்தவரையிலும் அந்த காளையை மடக்க வீரர்கள் நெடுநேரம் போராடினர். காளைக்கும், காளையருக்குமான போட்டியில் கடைசியில் ராவணனே வென்றது.

இதே நேரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம முக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோரின் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து பரிசுகளை வென்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் காளைகளை அவிழ்த்து வரிசையாக கொண்டு செல்வதில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து லேசான தடியடி நடத்தப்பட்டது.