​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலா தளங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய மக்கள்

Published : Jan 16, 2020 4:05 PM

சுற்றுலா தளங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய மக்கள்

Jan 16, 2020 4:05 PM

தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்த மக்கள் படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் குவிந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். தொடர் விடுமுறை தினம் என்பதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு படையெடுத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைப்பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தாருடன் விளையாடி மகிழ்ந்தனர். ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  விடுமுறையை உற்சாகமாக கொண்டாடினர். பூங்காவில் குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்டிருந்த படகு சவாரியிலும், நீச்சல் குளங்களிலும் சிறுவர், சிறுமியர் விளையாடி மகிழ்ந்தனர். 

நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள தலையணை அருவிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் தேங்கிய அருவி நீரில் குளித்து மகிழ்ந்தனர். வனப்பகுதியை ஒட்டிய தேங்காய் உருளி அருவி, பச்சையாறு அணை பகுதிக்கு அதிகளவில் மக்கள் வருகை தந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாறு நீர்த்தேக்கத்தில் குவிந்த மக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். முழு கொள்ளவு எட்டிய நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப்பயணிகள் ஆனந்தமாக குளித்து களித்தனர்.