​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம்.. அமெரிக்கா-சீனா உடன்பாடு..!

Published : Jan 16, 2020 6:43 AM



முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம்.. அமெரிக்கா-சீனா உடன்பாடு..!

Jan 16, 2020 6:43 AM

மெரிக்கா - சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இறக்குமதி வரி விதிப்பில் ஏற்பட்ட மோதலால், சுமார் 2 ஆண்டுகளாக, பரஸ்பரம் வர்த்தகப் போர் மூண்டது. இதனால், இருநாடுகளும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் பின்னடவை எதிர்கொண்டன. இருபெரும் நாடுகளின் வர்த்தக போர், உலகளவிலான பொருளாதாத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம், இந்திய நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் கையெழுத்தானது. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க - சீன உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹீ ஆகிய இருவரும் முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அமெரிக்கா - சீனா இடையே, நீடித்து வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது.

அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், இவ்வளவு எளிதாகவும், சீக்கிரமாகவும், வர்த்தகப் போர் விவகாரம் முடிவுக்கு வரும் என தம்மால் நம்ப முடியவில்லை என்று மகிழ்ச்சி வெளியிட்டார். கடந்தகால தவறுகள் களையப்படுவதன் மூலம், அமெரிக்க தொழிலாளர்கள், வேளாண் பெருங்குடி மக்களுக்கு, பொருளாதார நீதி மற்றும் பாதுகாப்பு கிடைக்க வழி ஏற்பட்டிருப்பதாகவும், டிரம்ப் கூறியிருக்கிறார்.

நிகழ்வில் பேசிய சீன துணை பிரதமர் லியூ ஹீ, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம், தங்கள் இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, உலக பொருளாதாரத்திற்கு உகந்தது, இதுவே புதிய ஆண்டின், புதிய தொடக்கம் என்றும் தெரிவித்திருக்கிறார்.