​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலவும் மோசடி பேர்வழிகளை களையெடுக்கப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் கருத்து

Published : Jan 12, 2020 12:48 PM

பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலவும் மோசடி பேர்வழிகளை களையெடுக்கப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் கருத்து

Jan 12, 2020 12:48 PM

தமிழகத்தில் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலாவி வரும் மோசடி பேர்வழிகள் விரைவில்  களையெடுக்கப்பட வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல், விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட கோரி, பத்திரிகையாளர் என்ற பெயரில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். மனுதாரரின் நம்பகத் தன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியதையடுத்து நீதிபதிகளிடம் மனுதாரரின் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

அவற்றில் சிலை கடத்தல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி வந்தது எனவும், மனுதாரரின் பத்திரிக்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா எனவும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

பத்திரிக்கையாளர் என்ற பெயரை, மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்துவதாகத் தெரிவித்த நீதிபதிகள், மஞ்சள் பத்திரிக்கை நடத்துபவர்களும் பத்திரிக்கையாளர் என கூறிக் கொள்வது வருத்தத்துகுரியது என்று கூறினர்.

பத்திரிகைகளை பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்கவும், பத்திரிக்கை துறையில் கருப்பு ஆடுகளை அகற்றவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். பத்திரிக்கைகளில் செய்தி என்ற பெயரில் கருத்து திணிப்பு நடைபெறுவதாகவும், பத்திரிக்கை சங்கங்களை போலி நிருபர்கள் நிர்வகிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

போலி பத்திரிக்கையாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மையான பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள் அரசின் சலுகைகள் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு கிடைப்பதில்லை என்றனர்.

உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க அறிவுறுத்திய நீதிபதிகள் தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா? என காவல் துறை விசாரிக்க உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் எத்தனை பத்திரிக்கைகள் உள்ளன? என்றும், எத்தனை பேருக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது? என்றும், எத்தனை பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ? என்றும் அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தகவல் தொடர்பு துறை செயலாளர், பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தை வழக்கில் சேர்த்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.