​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அறியாத வயசு...விபரீத தண்டனை...பறிபோன உயிர்..! பள்ளி நிர்வாகம் அலட்சியம்

Published : Jan 12, 2020 6:22 AM



அறியாத வயசு...விபரீத தண்டனை...பறிபோன உயிர்..! பள்ளி நிர்வாகம் அலட்சியம்

Jan 12, 2020 6:22 AM

திருச்சி அடுத்த முசிறியில் கேலி செய்த மாணவியை தாக்கியதாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர், விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியில் செல்லம்மாள் என்ற தனியார் CBSC பள்ளிக்கூடம் உள்ளது.

இங்கு காந்திநகரை சேர்ந்த துரைராஜ் - வாசுகி தம்பதியின் மூத்த மகன் பிரவீன் என்பவர் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பிரவீனின் தந்தை துரைராஜ் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் தாய் வாசுகி கவனிப்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சக மாணவி ஒருவரும் பிரவீனும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் இருவரது வீட்டுக்கும் காதல் விவகாரம் தெரியவந்ததால் பள்ளிக்கு வந்து மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவி பிரவீனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே பிரவீன் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்கள், மாணவிகள் முன்பு நிறுத்தி வைத்து பிரவீனை அவமானப்படுத்தும் விதமாக நடத்தியதாகவும், இதைப் பார்த்து மாணவி ஒருவர் பிரவீனை கேலி செய்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், அந்த மாணவியை கன்னத்தில் அறைந்ததால் அதற்கு தண்டனையாக அவரை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.10 நாட்கள் கழித்து பள்ளிக்குச் சென்ற பிரவீனை பள்ளி நிர்வாகம் நாள் முழுவதும் காத்திருக்க வைத்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இரு தினங்கள் சென்று காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பிரவீன் பின்னர் தாயை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போதும் அவரை காத்திருக்க வைத்துள்ளனர். அவரை பார்த்து பலரும் சிரித்தபடியே சென்றதால் பிரவீன் விரக்தி மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பின்னர் பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியைவிட்டு நீக்கியதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மன உளைச்சலுடன் வீட்டிற்கு வந்த பிரவீன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது மகனின் இந்த விபரீத முடிவுக்கு பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடியான நடவடிக்கையே காரணம் எனவும் அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்

 மாணவனின் ஒரு தவறுக்கு எத்தனை தண்டனை தருவீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ள உறவினர்கள், விரக்தி மனநிலையில் சாப்பிடாமல், தூங்காமல் தவித்த தங்கள் பிள்ளையை கவனமாக பார்த்துக் கொண்ட நிலையிலும் இந்த சோக சம்பவம் நிகழ்ந்து விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்

சம்பவம் தொடர்பாக விசாரித்த முசிறி காவல்துறையினரிடம், செல்லம்மாள் பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடி குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என்கின்றனர் பிரவீனின் உறவினர்கள். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்துவிட்டு நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று சோகத்துடன் காத்திருக்கின்றார் பிரவீனின் தாய் வாசுகி..! அதே நேரத்தில் பள்ளி நிர்வாகமோ மாணவர் பிரவீனிடம் தாங்கள் எந்த கெடுபிடியும் காட்டவில்லை என்றும், அவர் மாணவியை தாக்கியதால் தங்கள் நிர்வாகத்தில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றியதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.