​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு..!

Published : Jan 07, 2020 9:10 PM

ரூ.5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு..!

Jan 07, 2020 9:10 PM

சேலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை விற்க முயன்றவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கங்கவல்லியில் ராஜசேகரன் என்ற ரியல் எஸ்டேட் தரகர், கடந்த 3 மாதங்களாக ஐம்பொன் சிலையை விற்க முயற்சிப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலையை வாங்கும் நபர் போல் காவலர் ஒருவரை நடிக்க வைத்து சிலையை மீட்டுள்ளனர்.

சிலையை விற்க 5 கோடி ரூபாய் என பேரம் பேசி, 10 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த கூறிய ராஜசேகரனையும் வாட்சப் மூலம் தொடர்பு கொண்டு போலீசார் கைது செய்தனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார்சிங், ஐஜி அன்பு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தனர்.

இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது என விசாரணை நடத்தி வருவதாக ஏடிஜிபி அபய்குமார் சிங் தெரிவித்தார். சிலைக்கு சொந்தமானவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சிலையை தொல்லியல் ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்ததில் முதற்கட்டமாக பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலை என்பது தெரியவந்துள்ளது. அதன் வடிவமைப்பை வைத்து சோழர்கால சிலையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சிலை மாயமானதாக கொடுக்கப்பட்ட புகார்கள் மற்றும் வழக்குகளில் இந்த சிலை குறித்து தகவல்கள் இல்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ராஜசேகரன் இந்த சிலையை விற்பதற்கு தரகராக செயல்பட்டார் எனவும், வெளிநாட்டில் விற்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சிலையை யாருக்காக விற்பனை செய்ய முற்பட்டார்?.

இந்த சிலையை கடத்திய கும்பல் யார்? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையில் இந்த சிலையின் மதிப்பு 30 கோடிகளைத் தாண்டும் என கூறப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகளை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.