​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு

Published : Dec 25, 2019 9:33 AM



அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு

Dec 25, 2019 9:33 AM

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது. அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி- திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை - ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்... இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் நன்னாளில் அவதரித்தவரே ஆஞ்சநேயர்.

ராமநாமத்தையே தாரக மந்திரமாகவும் உயிர்மூச்சாகவும் கொண்ட பக்தன் அனுமன். அவரது ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

அனுமன் கோவில்களில் நெய்தீபம் ஏற்றி மலர்களையும் வெற்றிலை துளசி போன்றவற்றையும் சூட்டி இளநீர், பால் அபிசேகம் செய்வது பக்தர்களின் வழக்கம்.

நாமக்கல்லில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அதிகாலையில் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்பேட்டில் 15 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு பால் தயிர் இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகமும் பின்னர் 100 கிலோ வெண்ணையால் சிறப்பு அலக்காரமும் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். 

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்தீரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சனேயருக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், குங்குமம், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், மாதுளைச்சாறு, தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தமிழகம் கேரளாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். 

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியை அடுத்த பஞ்சவடி  ஆஞ்சநேயர் கோவிலில் 2000 லிட்டர் பாலைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் 700 ஆண்டுகள் பழமையான சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ராஜ அலங்காரத்தில் வெண்ணை காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பில் உலர்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி வனப்பகுதியில் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்க ஆராதனைகள் நடைபெற்றன. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். 

கோவை துடியலூரில் உள்ள குபேர ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வெற்றிலை மாலை, 1008 வடை மாலை சாத்தியும் லட்டு பிரச்சாதம் வைத்தும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பம்பை இசையில் அனுமன் துதி, கேரளா செண்டை மேளம், வாணவேடிக்கைகளும் இடம் பெற்றன.

இதேபோல் கோவை தொப்பம்பட்டி அடுத்துள்ள ஜெங்கமநாயக்கன்பாளையத்தில் நவாம்ஸ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு தங்க கலசத்தில் ராஜ மாருதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உலக நன்மை வேண்டி பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.