​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

Published : Dec 25, 2019 8:14 AM

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

Dec 25, 2019 8:14 AM

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நிலையூர். முருகன் வயலில் பூப்பரிக்கும் பெண்களுடன் இணைந்து தானும் பூப்பரித்துக் கொண்டே வாக்கு சேகரித்தார்.

மதுரை மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் தனம்ஜெயா கருப்பு வைரம் பெண்களுடன் வயலில் இறங்கி களையெடுத்தப்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

விளாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் இதயத்துல்லா தனது சின்னமான ஏணியை ஆட்டோவில் கட்டிக் கொண்டு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சரவணன் தொண்டர்களுடன் சென்று வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சர்மிளா ஐந்தடி கம்பில் தனது சின்னமான பூட்டு சாவியை கட்டி தொங்கவிட்டபடி மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக ஆட்சியில்  மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை மக்களிடையே எடுத்துரைத்தும், திமுகவை விமர்சித்தும் ரவீந்திரநாத குமார் வாக்கு சேகரித்தார். 

கோயம்புத்தூர்:

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த மத்தவராயபுரம் ஒன்றியத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மக்களிடம் வாக்கு சேகரித்தார். 

தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் செல்வராணி செல்வராஜ் என்பவர் தனது சின்னமான மூக்கு கண்ணாடியை வாக்காளர்களுக்கு அணிவித்து வாக்கு சேகரித்தார். 

பெரியக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் மாரியம்மாள் போத்திராஜ் இரட்டை இலை சின்னத்தை காண்பித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தேவாலயத்தில் பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி மாரியம்மாள் போத்திராஜ் கேட்டுக் கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி பகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம் தலைமையிலான தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  

புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் கிராமத்தில் ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் என்ற பெயரில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  விளம்பர பதாகை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அதில், வெற்றிப்பெறும் வேட்பாளர்கள் தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை ஊராட்சி வளர்ச்சிப் பணியின் மூலம் எடுத்துவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்றும், கிராமசபை கூட்டங்களில் ஆலவயல் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் பொதுமக்களால் கேட்டு அறியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சரிபார்க்கப்படும் வரவு செலவு கணக்குகளில் ஊழல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர், பதவி ஆகியவை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தெரிவிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பாஸ்கரன் பிரச்சாரம் மேற்கொண்டார். கிராமங்கள் தோறும் திறந்த வெளி ஜீப்பில் சென்ற அமைச்சர் பாஸ்கரன், அதிமுக அரசு செய்த நலத்திட்ட உதவிகளையும், திட்டங்களையும் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். 

கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் சரவணன் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோன்று அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தனர். பாதிரிகுப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

தருமபுரி மாவட்டம் எச்சனஅள்ளி பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் முனி ஆறுமுகம் என்பவர் முண்டாசுடன், ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு கையில் திருவோடு ஏந்தியபடி தனியாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வாக்குகளை பிச்சையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்ட ஆறுமுகம், வாக்களிக்க பணம் பெறுவது குற்றமாகும் என்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சுயேட்சையாக போட்டியிடும் அமமுக கட்சி வேட்பாளர்கள் 6 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இன்றுடன் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள அமமுகவில் இருந்த 12 பேர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் தங்கமணி பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன் வாழ்த்தும் தெரிவித்தார். 

ஈரோடு மாவட்டம் பெருமுகை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பிரகாஷ், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். பாரம்பரிய முறையை நினைவு கூறும் விதமாகவும், விவசாயத்தை ஆதரிப்பதற்காகவும் மாட்டுவண்டியில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டதாக பிரகாஷ் தெரிவித்தார். 

பவானி மற்றும் அந்தியூர் பகுதிகளில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பிரச்சாரம் செய்தார். திறந்த வேன் மூலம் வீதி, வீதியாக சென்ற அமைச்சர் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். 

சேலம் மாவட்டம் காவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சென்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் பாமகவினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து வாக்கு சேகரித்தனர். 

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலம்பூர் ஊராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 21 வயதான நாகார்ஜூன் என்ற இளைஞர் வீதி வீதியாக நடந்து சென்று ஒலிப்பெருக்கியில் பேசியபடி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.