​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு சிறுமி கொலை - காதலன் கைது..!

Published : Dec 21, 2019 3:37 PM

மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு சிறுமி கொலை - காதலன் கைது..!

Dec 21, 2019 3:37 PM

வேலூரில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டுக் கொன்றதாக காதலனும் அவனது நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் தீர்த்தகிரி மலையடிவாரத்தில் கடந்த 17ஆம் தேதி அழுகிய நிலையில் சிறுமி ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சிறுமி அரியூர் குப்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை கேண்டீனில் ஊழியராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

கடந்த 14ஆம் தேதி முதல் அவரைக் காணவில்லை என பெற்றோர் போலீசில் புகாரளித்திருப்பதும் தெரியவந்தது. சிறுமியின் செல்போன் எண்ணை டிராக் செய்து விசாரணை மேற்கொண்டதில் காதல் விவகாரத்தில் இந்தக் கொலை அரங்கேறி இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

சிறுமியும் ரங்காபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பிரகாஷ் என்பவனும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்துக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், 2 மாதங்களாக சிறுமியிடம் இருந்து பிரகாஷ் விலகத் தொடங்கியிருக்கிறான்.

கேண்டினில் பணிபுரியும் வேறொரு நபருடன் சிறுமி பழகுவதாகக் கூறி அவன் விலகியதாகக் கூறப்படும் நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சிறுமி வற்புறுத்தி வந்துள்ளார். சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படும் நாளன்று துணிகள், பள்ளிச் சான்றிதழ்கள் சகிதம் காதலனை மணந்தே தீர வேண்டும் என்ற முடிவோடு ரங்காபுரம் வந்திருக்கிறார் சிறுமி.

சிறுமியின் தொல்லை தாங்காமல் அவரை கொலை செய்ய முடிவு செய்த பிரகாஷ், அவனது உறவினரான நவீன் என்ற நபருடன் சிறுமியை புதுவசூர் கல்குவாரிக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

அங்குவைத்து சிறுமியை மலை உச்சியில் இருந்து தள்ளி கொலை செய்த இருவரும் சிறுமியின் செல்போன், கைப்பை உள்ளிட்டவற்றை தூக்கி கல்குவாரி குட்டைக்குள் வீசி எறிந்துவிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். பிரகாஷையும் நவீனையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.