​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

Published : Dec 15, 2019 8:04 AM

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

Dec 15, 2019 8:04 AM

சென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா, கடந்த மாதம் 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவியின் செல்போனில், பேராசிரியர்கள் 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, தமது தற்கொலைக்கு அவர்கள்தான் காரணம் என தெரிவித்திருந்தது தொடர்பான ஆதாரம் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்கள், ஐ.ஐ.டி. பணியாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்து தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தார். டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் நேரில் சந்தித்து சிபிஐ விசாரணை கோரி அவர் மனு அளித்திருந்தார்.

மாணவியின் செல்போனில் கைப்பற்றப்பட்ட ஆதாரம் உண்மையானது என தடயவியல் துறையினர் உறுதிப்படுத்தியிருந்தனர்.சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணை இறுதிகட்டத்தை அடைந்திருந்த நிலையில், வழக்கு சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும் என கூறப்படுகிறது.