​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..! அருள்வாக்கு அட்டூழியங்கள்

Published : Dec 14, 2019 8:41 PMகாஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..! அருள்வாக்கு அட்டூழியங்கள்

Dec 14, 2019 8:41 PM

சேலம் அருகே காதலனை மறக்க முடியாமல் பேய் பிடித்தது போல நாடகமாடிய பெண்ணை பிரம்பால் அடித்து காதலை கைவிட வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கையில் பிரம்பை எடுத்து விளாசும் திருநங்கையின் அட்டாக் அருள்வாக்கு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

காஞ்சனா படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் பேய் பிடித்தது போல நடித்து ராகவா லாரன்ஸ் மிரட்டியிருப்பார், அதே பாணியில் தன்னை மதுர காளியம்மனாக நினைத்துக் கொண்டு கையில் பிரம்பு கம்புடன் அட்டாக் அருள்வாக்கு கூறிவரும் திருநங்கையான மதுர என்பவர் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சேலம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த திருநங்கை மதுர என்பவர் அந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அருள் வாக்கு கூறி வருவதாக கூறப்படுகின்றது. குழந்தையின்மை, தொழில் நஷ்டம், ஆண் பெண் வசியம், திருமண தடை, என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதாக விளம்பரப்படுத்தியுள்ள இவர் தன்னிடம் அருள் வாக்கு கேட்க வரும் பதின்பருவத்தினரை பிரம்பால் அடித்து மிரட்டி உருட்டி, அவர்கள் வாயில் இருந்து உண்மையை வரவைத்து விடுவார் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த வாரம், மதுரவிடம் சேலம் செவ்வாய் பேட்டையை சேர்ந்த பெற்றோர், தங்கள் மகளுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.

அந்த பெண்ணின் தலைமுடியை கொத்தாக பிடித்து அருள்வாக்கை ஆரம்பித்த மதுர அந்த பெண்ணின் நடவடிக்கைகளை வைத்து அவருக்கு பேய் பிடிக்கவில்லை என்பதை கண்டறிந்தார். பின்னர் பிரம்பால் அடித்து, அந்த பெண் பக்கத்து ஊரில் ஒரு பையனை காதலித்து வருவதை தெரிந்து கொண்டார்.

காதலனை கைபிடிப்பதற்கும், பெற்றோர் பார்த்துள்ள மாப்பிள்ளையை தவிர்ப்பதற்குமே பேய் பிடித்தது போல நாடகமாடியது அம்பலமானதால், அந்த இளம் பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்து காதலை கைவிட நிர்பந்தித்தார் மதுர.

ஒரு கட்டத்தில் கைவிடுவதாக ஒப்புக் கொண்ட பெண்ணின் முன்னால், சூடம் ஏற்றி காதலை கைவிடுவதாக சத்தியம் செய்ய நிர்பந்தித்தார் திருநங்கை மதுர, அந்த பெண்ணோ காதலில் உறுதியாக இருந்ததார். தொடர்ந்து பிரம்படி விழுந்ததால் வலி தாங்க முடியாமல் தனது இடது கையால் வேண்டா வெறுப்பாக சூடத்தை அணைத்து சத்தியம் செய்தார்.

இளம்பெண்ணை பிரம்பால் அடித்து வெளுத்த சம்பவத்தை தனது ஊழியர் மூலம் படம் பிடித்து தனது அருள்வாக்கு மகிமை என வீடியோவாக பரப்பியதால் அருள்வாக்கு திருநங்கை மதுரவுக்கு சிக்கல் உருவானது.

இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த வீடியோவை ஆன்லைன் மூலம் புகாராக மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அடிவாங்கிய அந்த இளம் பெண் மீண்டும் சனிக்கிழமை திருநங்கை மதுரயை சந்தித்து தான் திருந்தி விட்டதாக கூறி ஆசி வாங்கி செல்லும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சர்ச்சையில் சிக்கி உள்ள அட்டாக் அருள்வாக்கு திருநங்கை மதுர, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இளைஞர் ஒருவரை பிரம்பால் சிறப்பாக கவனித்ததால், அடி தாங்க முடியாமல், வீட்டில் பணத்தை திருடியது முதல், நண்பர்களுடன் சேர்ந்து செய்த தவறுகளை எல்லாம் அவரது தாய் முன்னிலையில் அந்த இளைஞர் ஒப்புக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

போட்டு, வாங்குவது... என்ற பாணியில் அவர்களது வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்கி அதையே அருள் வாக்காக சொன்னாலும், கையில் பிரம்பு எடுத்து அடிப்பது ஏற்புடையதல்ல என்பதே பலரின் கருத்தாக உள்ளது.