​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறார் ஆபாசப்பட விவகாரம்.. தீவிரமடையும் விசாரணை..!

Published : Dec 13, 2019 10:11 AM

சிறார் ஆபாசப்பட விவகாரம்.. தீவிரமடையும் விசாரணை..!

Dec 13, 2019 10:11 AM

சிறார் ஆபாசப்பட விவகாரத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட 60 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக அவர்களில் 15 பேரை அவர்களின் IP முகவரி மூலம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.  

குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்களை இணையதளங்களில் பதிவேற்றம், பதிவிறக்கம் மற்றும் பகிர்பவர்கள் மீது போக்சோ மற்றும் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

அதன் தொடர்ச்சியாக விறுவிறுவென விசாரணையில் இறங்கிய போலீசார், முகநூலில் போ`லி கணக்குகள் துவங்கி குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவேற்றியதாக திருச்சியைச் சேர்ந்த கிரிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவனை முதற்கட்டமாக கைது செய்துள்ளனர்

3 வெவ்வேறு முகநூல் கணக்குகள் மூலம் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்த கிறிஸ்டோபரின் நட்புப் பட்டியலில், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் 60 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தனது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்டோபரின் முகநூல் பக்கங்களில் தொடர்ந்து ஆபாச படங்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டு வந்ததால் அடுத்தடுத்து முகநூல் நிறுவனத்தால் முடக்கப்பட்டன. ஆனாலும் புதிய பெயரில் புதிய ஐடியில் கிறிஸ்டோபர் அடுத்தடுத்து கணக்குகளை தொடங்கி ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளான்.

கிறிஸ்டோபரின் முகநூல் பக்கத்தில் இணைந்திருந்த சுமார் 60 பேரில் முதற்கட்டமாக 15 பேரின் IP முகவரிகள் குறித்தான விசாரணை தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக திருச்சியில் 15 இடங்களில் போலீசார் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது மற்றும் பதிவேற்றம் செய்தவர்களின் பல IP முகவரிகளை அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு ,கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பகிர்ந்ததாக அடுத்த பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.