​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி

Published : Dec 12, 2019 4:19 PM



அயோத்தி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி

Dec 12, 2019 4:19 PM

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

அயோத்தியில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர்கோவில் கட்டலாம் என்று கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பை எதிர்த்து நிர்மோஹி அகாரா, அகில பாரத இந்து மகாசபா மற்றும் அனைத்து இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் ஆதரவு பெற்ற முஸ்லீம் அமைப்புகள் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும் வழக்கில் சம்பந்தப்படாத சிலரும் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன், 18 சீராய்வு மனுக்களும் விசாரணைக்கு வந்தது.

அந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு ஏற்றதாக இல்லை என்று கூறி அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தான் அதே வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்களையும் விசாரிப்பார்கள்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் ஒருவரான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்று விட்டதால், அவருக்குப் பதிலாக நீதிபதி சஞ்சீவ் கன்னா இடம்பெற்று இருந்தார்.