​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக - கேரள நதிநீர் பங்கீடு...அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை...

Published : Dec 12, 2019 11:11 AM



தமிழக - கேரள நதிநீர் பங்கீடு...அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை...

Dec 12, 2019 11:11 AM

தமிழக - கேரள நதிநீர் பங்கீடு தொடர்பாக இருமாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

தமிழகம் - கேரளாவுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது இருமாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்காக, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை செயலாளர் அசோக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், இந்த குழுவினர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பல கட்டங்களாக கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய முதல் கூட்டத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அடுத்துவரும் கூட்டங்களில், பாண்டியாறு - புன்னம்புழா, நீராறு - நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம், செண்பகவள்ளி நீர்வழிப்பாதை சீரமைப்பு என பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இதனிடையே கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன், பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான நடைமுறை சிக்கல்கள் குறித்தும், இரு மாநில மக்களும் பயன்பெறும் வகையில் அதனை நடைமுறை படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.