​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

Published : Dec 10, 2019 5:16 PM



வெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

Dec 10, 2019 5:16 PM

வெங்காய பதுக்கலை தடுக்க மாநிலம் முழுவதும் 33 குழுக்கள் அதிரடி ஆய்வுவில் ஈடுபட்டிருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு எஸ்.பி சாந்தி தெரிவித்திருக்கிறார். வெங்காயத்தை பதுக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்திருக்கிறார். 

சென்னை நந்தனத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் அதன் காவல் கண்காணிப்பாளர் சாந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, வெங்காய விலை அதிகரித்துள்ள சூழலில், வியாபாரிகள் வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்டறிய குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி சார்பில், 33 குழுக்கள் அமைக்கப்பட்டு 40 இடங்களில் சோதனை நடைபெறுவதாக எஸ்.பி சாந்தி தெரிவித்திருக்கிறார்.

மேலும், வெங்காயப் பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பண்டக சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன்படி, அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும், கடை உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும், எஸ்.பி சாந்தி எச்சரித்திருக்கிறார்.

மேலும், சென்னையைப் பொறுத்தவரை வெங்காய பதுக்கல் நடைபெறுவதாக தெரிந்தால் பொதுமக்கள் 98409-79669 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்றார்.

இதுவரை, வெங்காயப் பதுக்கல் தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், அவ்வாறு புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு எஸ்.பி சாந்தி கூறியிருக்கிறார்.

அன்றன்றைக்கு தாங்கள் வாங்கும் வெங்காயத்தை, அன்றன்றைக்கே, வியாபாரிகள் விற்றுவிட வேண்டும் என்றும், பதுக்கிவைக்க கூடாது என்றும் எஸ்.பி சாந்தி அறிவுறுத்தியிருக்கிறார்.