​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..!

Published : Dec 10, 2019 4:00 PM

மலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..!

Dec 10, 2019 4:00 PM

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மலை உச்சியில் 200 கிலோ எடை கொண்ட ராட்சத கொப்பரையில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர். 

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில்  பரணி தீபம் ஏற்றப்பட்டது.  தொடர்ந்து பகல் 11 மணி வரை கோவிலுக்குள் வந்த பக்தர்கள் பரணி தீபத்தை தரிசித்தனர்.

கோவிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக 2 ஆயிரத்து 500 பேர் மட்டுமே மலை மீது அனுமதிக்கப்பட்ட நிலையில், கோவிலில் இருந்தவாறு மகா தீபத்தை தரிசிக்க முன் பதிவு செய்திருந்த 8 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 5.55 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சரியாக மாலை 6 மணிக்கு அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன் சமேதராக சன்னதியில் இருந்து வெளியில் வரும் நேரத்தில் மலை மீது 200 கிலோ எடை கொண்ட ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது கிரிவலப்பாதையிலும், சன்னதி எதிரிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் அண்ணாமலையாருக்கு அரோகரா....என்று விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கோவில் கொடி மரம் எதிரிலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும். அதற்கேற்ற வகையில் 3 ஆயிரத்து 500 கிலோ நெய்யில், ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட காடா துணியால் ஆன திரியில் தீபம் எரிய விடப்படுகிறது. 40 கிலோமீட்டர் தூரம் வரை மகா தீப ஜோதியை தரிசிக்க முடியும்.

மகா தீபத்தை நேரில் தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் அதிகாலை முதலே திருவண்னாமலை வந்து குவிந்தனர். அதிகாலை பரணி தீபத்தை தரிசித்த பின்னர், கிரிவலப்பாதையில் வலம் வந்தனர். 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப்பாதையில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்ற வண்ணம் இருந்தனர்.

நாளை காலை 11.10 மணி முதல் 12 ந் தேதி காலை 11.05 மணி வரை பவுர்ணமி என்பதால் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு மேலும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.

இதையடுத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.