​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

Published : Dec 09, 2019 7:48 AM

விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

Dec 09, 2019 7:48 AM

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

நீலகிரி 

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிந்தும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்து தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்திருந்த நிலையில், சீரான கால நிலை நிலவுவதாலும், வார விடுமுறையை முன்னிட்டும் நேற்று அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். உதகை தாவரவியல் பூங்கா புல்வெளியில் விளையாடி மகிழ்ந்த பயணிகள், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். படகு இல்லம், டால்பின் நோஸ் கேத்ரீன் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கன்னியாகுமரி 

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்தனர். மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக வெளியூர் பயணிகள் வரத்து குறைந்திருந்தது. அரண்மனையின் கட்டிடக்கலை, மந்திரசாலை, தாய்க் கொட்டாரம், நாடகசாலை உள்ளிட்ட பழங்கால கட்டிக்கலைகளை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சபரிமலைக்கு சென்று திரும்பி வரும் ஐயப்ப பக்தர்கள் என களைகட்டியது. நீச்சல் குளம் மற்றும் படகு குழாமிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

தேனி 

ஐயப்ப சீசன் மற்றும் விடுமுறை தினம் என்பதால் தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் ஆர்பரித்துக் கொட்டும் அருவி நீரில் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் திரளானோர் குளித்து மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐயப்ப சீசன் என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.