​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பரிபூரணமாக மலர்ந்த தாமரை..! எடியூரப்பா அரசு தப்பியது

Published : Dec 09, 2019 6:50 AM



பரிபூரணமாக மலர்ந்த தாமரை..! எடியூரப்பா அரசு தப்பியது

Dec 09, 2019 6:50 AM

கர்நாடகாவில், 15 தொகுதி இடைத்தேர்தலில், 12 இடங்களில் பாஜக அபார வெற்றிப்பெற்றுள்ளது. பெரும்பான்மை பலத்தை விட கூடுதலான இடங்களை பெற்றிருப்பதால், எடியூரப்பா தலைமையிலான ஆளும் பாஜக அரசுக்கான ஆபத்து முழுமையாக நீங்கியுள்ளது. 

கர்நாடகாவில் சிவாஜி நகர், கே.ஆர்.புரம், விஜயநகரா, கே.ஆர்.பேட்டை உள்ளிட்ட 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க.வும், காங்கிரசும் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மதச்சார்பற்ற ஜனதா தளம் 12 தொகுதிகளில் போட்டியிட்டது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், 11 மையங்களில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, இடைநிற்றலின்றி விறுவிறுப்பாக எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிவில், போட்டியிட்ட 15 தொகுதிகளில், பாஜக, 12 தொகுதிகளில் வெற்றிப்பெற்று, கர்நாடக மக்களிடம் உள்ள செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் பல இடங்களில் வாக்குகளை பிரித்ததால், காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஹோசகோட்டி((Hosakote)) தொகுதியில் சுயேட்சை ஒருவரும் வெற்றிப்பெற்றிருக்கிறார்.

கே.ஆர்.புரத்திலும், மகாலட்சுமி லே-அவுட் தொகுதியிலும், தலா 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் வாகை சூடியிருக்கின்றனர். 7 தொகுதிகளில், 27 ஆயிரம் முதல், 39 ஆயிரம் வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி, பாஜக வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர்.

இன்றைய வெற்றியின் மூலம், 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பாரதிய ஜனதாவிற்கான பலம், 117 ஆக உயர்ந்திருக்கிறது. காங்கிரசுக்கு 66 பேரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளது.

பெரும்பான்மை கிடைக்க 6 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. இருந்த நிலையில், அதைவிட கூடுதலாக 6 இடங்களை பெற்றிருக்கிறது. இதன்மூலம், எடியூரப்பா ஆட்சிக்கு நிலவி வந்த ஆபத்து, முழுமையாக நீங்கியுள்ளது.

இதற்கிடையே, கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி குறித்து, முதலமைச்சர் எடியூரப்பா மகிழ்ச்சித் தெரிவித்திருக்கிறார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தேர்தல் பணியாற்றிய தொண்டர்களுக்கும், பாஜகவுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார். அடுத்த சில நாட்களில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அப்போது, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என்றும், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். 

இதனிடையே, 15 தொகுதி இடைத்தேர்தல் படுதோல்விக்குப் பொறுப்பேற்று, கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியிலிருந்தும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா விலகியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்திற்கு மதிப்பளித்தே இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாகவும், தமது பதவி விலகல் கடிதத்தை, சோனியா காந்திக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.