​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..!

Published : Dec 08, 2019 7:16 AM



பிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..!

Dec 08, 2019 7:16 AM

மதுரையில் பிரியாணி சமைப்பதற்கு 2 கிலோ வெங்காயம் திருடியவர் சிசிடிவி காட்சி மூலம் சிக்கி உள்ளார். செல்போன் பேச்சில் மூழ்கிய கடை ஊழியரால், 6 மாதங்களாக  நடந்த பகல்கொள்ளை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் வெங்காயத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெங்காய பதுக்கல்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு விலை வைத்து வெங்காயத்தின் விலையை ஏற்றி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வட மாநிலங்களில் இருந்து வரும் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில், மதுரை கோமதிபுரத்தில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு உரிமையாளர் இல்லாத நேரத்தில் சென்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அரிசிக்கு 1500 ரூபாய் பணம் தரவேண்டும் என்று கேட்க கடை ஊழியரும் உரிமையாளரிடம் போனில் கேட்டுள்ளார். அரைதூக்கத்தில் இருந்த உரிமையாளரும் அரிசி வியாபாரி வந்திருப்பதாக நினைத்து பணம் கொடுக்க கூறியுள்ளார்.

கடைக்கு வந்து பார்த்தால் பணம் வாங்கிச்சென்றது அரிசி வியாபாரி அல்ல என்பது தெரியவந்ததால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த மர்ம ஆசாமி மதிய வேளையில் ஆள் இல்லா நேரத்தை பயன்படுத்தி கடைக்குள் புகுந்துள்ளார். அபோது கடை ஊழியர் செல்போனில் பேசியபடியே கடைக்குள் அங்குமிங்கும் செல்வதை நோட்டமிட்டு, 2 கிலோ வெங்காயம், பிரியாணி அரிசி பாக்கெட், பிஸ்கட் பாக்கெட் என ஒவ்வொன்றாக திருடி பையில் போடுவதையும், பின்னர் கடையின் பெண் ஊழியரிடம் பேச்சுக்கொடுத்து 1500 ரூபாய் பணத்தை ஏமாற்றி வாங்கிச்செல்வதையும் கண்டு அதிர்ந்து போயினர்.

இதுதொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே அடுத்தடுத்த நாட்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த நபர் தொடர்ச்சியாக பல நாட்கள் வெங்காயம் மற்றும் பிரியாணி அரிசி திருட்டில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து, சனிக்கிழமை மாலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கைவரிசை காட்டும் திட்டத்தில் கடைக்குள் நுழைந்த வெங்காய கொள்ளையனை கடையின் உரிமையாளர் மடக்கி பிடித்தார். விசாரணையில் அவர் கொன்றை வீதியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பதும் பிரியாணி சமைப்பதற்காக வெங்காயத்தையும் அரிசியையும் திருடிச்சென்றது தெரியவந்தது.

அப்துல்ரகுமானை பிடித்து கடைக்காரர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க , திருடிய வெங்காயம் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும், முழுமையாக பணம் கொடுத்து விடுவதாக கூறி அப்துல் ரகுமானின் உறவினர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஒரு பக்கம் திருடும் அளவுக்கு வெங்காயத்தின் மதிப்பு உயர்ந்துவிட, புதிதாக திருமணம் செய்த மணமக்களுக்கு வெங்காயம் பரிசு கொடுப்பது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

உறிக்க உறிக்க ஒன்னுமிலாத வெங்காயம் என்றவர்கள் விலையை கேட்டு வாயடைத்து போயுள்ளனர் என்பதே கண்களை குளமாக்கும் உண்மை..!