​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்

Published : Dec 07, 2019 4:34 PM



டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்

Dec 07, 2019 4:34 PM

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சென்னையில் கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி திருநெல்வேலி, தென்காசி உள்பட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. நாளை மறு நாள் முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்கும் என்றும், ஜனவரி 2ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

image

கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறும். 4 பதவியிடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். மொத்தம் 49 ஆயிரத்து 688 வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடைபெற உள்ளது.

image

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவியிடங்களை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெற இருக்கிறது.

சென்னை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடரும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.